கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சிலையுடன் மணிமண்டபம்! அடிக்கல் நாட்டினார் சசிகலா! சிலை திறப்பு எப்போது?
நீலகிரி: கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க சசிகலா இன்று அடிக்கல் நாட்டினார். ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமையும் இடத்தில் இன்று பூமி பூஜை நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் தேயிலை தோட்டம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ளது. ஜெயலலித உயிரோடு இருந்த காலத்தில் கோடநாட்டிற்கு அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வாடிக்கை. அப்போது சசிகலாவும் உடன் செல்வார். கோடை காலங்களில் தனது முகாம் அலுவலகமாகவே கோடநாடு பங்களாவை பயன்படுத்தி வந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சசிகலா இங்கு வருகை தரவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கோடநாடு பங்களாவில் ஆவணங்கள் கொள்ளை, காவலாளி கொலை ஆகிய சம்பவங்கள் நடைபெற்று அதுகுறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு வருகை தந்தார்.
கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா பங்கேற்றார். இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் எஸ்டேட் மேலாளர் நடராஜ் மற்றும் சசிகலா குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர். கோடநாடு காட்சி முனைக்கு செல்லும் பிரதான சாலை அருகே 10 நம்பர் நுழைவு வாயில் பகுதியில் ஜெயலலிதா சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.
ஜெயலலிதா மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிய சசிகலா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கோடநாடு சுற்றுலா இடமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்ல வேண்டும் என்பதற்காகவே, சாலையோரமாக இடத்தை தேர்வு செய்துள்ளதாகவ்யும், பணிகளை விரைந்து முடித்து, வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிலை திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.