JettWings: இந்தியாவின் புதிய விமான நிறுவனம் .. வடகிழக்கு மாநிலங்கள் டார்கெட்..!!
டெல்லி: இந்தியாவில் விமான சேவைகளுக்கான கட்டணம் குறையக் குறைய பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, இதுமட்டும் அல்லாமல் நடுத்தர மக்களும் விமானத்தில் பயணிக்கும் வகையில் கட்டணம் இருக்கும் காரணத்தால் விமானத்தை பிரமிப்பாகப் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்த நிலையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களையும், விரிவாக்கத்தையும் செய்து வந்தாலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதிக்கு இதுவரையில் நிலையான விமான போக்குவரத்து சேவை இல்லை.
சமீபத்தில் இந்தியாவின் பெரு நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டை வடகிழக்கு பகுதிக்கு கொண்டு செல்லும் நேரத்தில், இப்பகுதிக்கு விமானச் சேவை அளிக்க புதிய விமான நிறுவனம் உருவாகியிருப்பது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
குவஹாத்தியை தலைமையிடமாகக் கொண்ட ஜெட்விங்ஸ் ஏர்வேஸ் ( JettWings Airways), வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 12 புதிய விமானச் சேவைகளை இயக்குவதற்கான ஒப்புதலைப் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
புதிய விமான இணைப்புகள்: இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய நிறுவனமாக இணைந்துள்ள ஜெட்விங்ஸ் ஏர்வேஸ், இந்தியாவில் சிறு நகரங்களை இணைக்கும் பிராந்திய இணைப்பு திட்டத்தின் (RCS) – UDAN திட்டத்தின் கீழ் பாக்யோங், குவஹாத்தி, கொச்பிகர், குஷிநகர், கயா, பரேலி, கான்பூர் மற்றும் ஆக்ரா விமான நிலையங்களை இணைக்க உள்ளது.
ஜெட்விங்ஸ் ஏர்வேஸ் அடுத்த ஐந்தாண்டுகளில் 42 விமானங்களை வாங்கி இயக்குவதற்கான வலுவான வர்த்தக திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் விமான நிறுவனமாக ஜெட்விங்ஸ் ஏர்வேஸ் இருக்கும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு இந்தியாவின் கடினமான நிலப்பகுதிகளில் வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், இப்பகுதியின் முதல் விமான நிறுவனமாக ஜெட்விங்ஸ் ஏர்வேஸ் உருவெடுத்துள்ளது.
பாக்யோங், குவஹாத்தி, கொச்பிகர், குஷிநகர், கயா, பரேலி, கான்பூர் மற்றும் ஆக்ரா விமான நிலையங்களை இணைப்பதன் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மத்தியிலான இணைப்பை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் இப்பகுதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பெரிய அளவில் பலன் அளிக்கும்.
ஜெட்விங்ஸ் ஏர்வேஸ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் (MoCA) சரக்கு விமான போக்குவரத்து சேவை வழங்க தடையில்லாச் சான்றிதழை (NOC) ஜூன் 2023 இல் பெற்றது. இப்போது இதுதான் முதல் வடகிழக்கு தனியார் விமான நிறுவனமாக இருக்கிறது.