ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி, தலித், வலதுசாரி மாணவ அமைப்புகள் வலுவாக இயங்கக்கூடிய ஒன்று. டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கும். அந்த வகையில், நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் அண்மையில் நடத்தப்பட்டது.

அகில இந்திய மாணவர் சங்கம் (AISA), ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு (DSF), இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) ஆகியவற்றை உள்ளடக்கிய ஐக்கிய இடதுசாரிகள் சார்பில் தலைவர் பதவிக்கு தனஞ்சய் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ்.எஸ்-இன் ABVP மாணவர் சங்கத்தின் உமேஷ் சந்திரா என்பவர் போட்டியிட்டார். காங்கிரஸின் மாணவர் அமைப்பான NSUI சார்பாக ஜுனைத் ராசா தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

இந்த நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 2,598 வாக்குகள் பெற்று ஐக்கிய இடதுசாரிகள் வேட்பாளர் தனஞ்சய் வெற்றி பெற்றார். ABVP வேட்பாளர் உமேஷ் சந்திரா 1,676 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

இந்த நிலையில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள்.

ஏ.பி.வி.பி அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் ஸ்வாதி சிங் அவர்களின் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்திவிட்டது. இத்தனை வெட்கக்கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், JNU மாணவர்கள் தங்களது முற்போக்கு செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர்.

வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்துவார்கள்!” என பதிவிட்டுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக 27 ஆண்டுகளுக்கு பிறகு தலித் சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றுள்ள பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த தனஞ்சய் தலித் சமூகத்தை சேர்ந்தவர். 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பட்டி லால் பைரவாவிற்கு பிறகு, 27 ஆண்டுகள் கழித்து இடதுசாரி அமைப்புகள் சார்பாக போட்டியிட்ட தனஞ்சய் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *