இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வெறும் 15% வரி.. ஆளுக்கு 2 டெஸ்லா வாங்கலாம்..!!
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவை உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஹப் ஆக மாற்ற வேண்டும் என முக்கிய இலக்குடன், வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களையும், அதனுடைய லேட்டஸ்ட் உற்பத்தி தொழில்நுட்பத்தை இந்தியாவில் கொண்டு வரவும் புதிய எலக்ட்ரிக் வாகன திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய எல்கட்ரிக் வாகன திட்டத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மாபெரும் PLI திட்டத்தின் சலுகையுடனும், அதனுடைய இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு பெரும் வரி சலுகையும் அளிக்க மத்திய அரசு இந்த புதிய கொள்கை மூலம் அறிவித்துள்ளது.
இப்புதிய கொள்கை கீழ் சலுகை பெற முதலில் குறைந்தபட்ச தொகையாக ரூ.4,150 கோடி அல்லது 500 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து தொழிற்சாலையை 3 வருடத்திற்குள் கட்டி முடித்து உற்பத்தியைத் துவங்க வேண்டும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை.
இத்திட்டத்தின் விதிகளை ஏற்று முதலீடு செய்யும் வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்குக் கிடைக்கப்போகும் ஜாப்பாட் சலுகை இதுதான்.
குறைந்தது 35,000 டாலர் சி.ஐ.எஃப் மதிப்புள்ள ஒரு எலக்ட்ரிக் கார்களுக்கு ( சி.ஐ.எஃப் என்பது கப்பல் போக்குவரத்து செலவு, காப்பீடு, சரக்குக் கட்டணம் சேர்க்கப்பட்ட தொகை), CKD வடிவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு விதிக்கப்படும் அதே 15% சுங்க வரியை 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்படும்.
இதற்கு நிபந்தனையாக, உற்பத்தியாளர் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவ வேண்டும். மேலும் இறக்குமதி அனுமதிக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களின் மொத்த எண்ணிக்கையில் விலக்கு அளிக்கப்படும் வரி, முதலீடு செய்யப்பட்ட தொகை அல்லது 6,484 கோடி ரூபாய் (PLI திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைக்குச் சமம்) வரை வரையறுக்கப்படும்.
மேலும், முதலீடு 800 மில்லியன் டாலர் தாண்டினால், அதிகபட்சமாக 40,000 மின்சார வாகனங்கள் 5 ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். ஆண்டுதோறும் 8,000 வாகனங்கள் என்ற வீதத்தில் இந்த இறக்குமதி அமையும்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் உற்பத்தியாளர்கள், மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவி, மின்சார வாகன உற்பத்தியைத் தொடங்க வேண்டும். இதேபோல் ஐந்து ஆண்டுகளுக்குள், குறைந்தது 50% உள்நாட்டு மதிப்புக் கூட்டல் (DVA) ஐ அடைய வேண்டும். மேலும், மூன்றாம் ஆண்டில் குறைந்தது 25% உள்நாட்டு உற்பத்தி (Localisation) அளவை எட்ட வேண்டும்.
முதலீட்டு உறுதி மற்றும் குறைந்தபட்ச முதலீடு நிபந்தனைகளைப் பின்பற்றாத சூழ்நிலையில், வங்கி கேரண்ட்டி மூலம் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.