கடலை பருப்புடன், இந்த 4 பொருளை சேர்த்து அரைச்சா போதும்.. இட்லி, தோசைக்கு அருமையான சட்னி ரெடி!

உங்களின் வேலையை குறைக்கத் தான் நாங்கள் தினமும் உங்களுக்காக ஐடியாவைக் கொடுக்கும் வகையில் காலையில் ஒரு சைடு டிஷ் ரெசிபியைப் போடுகிறோம்.

இன்று உங்கள் வீட்டில் செய்யும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்யலாம் என்றால், கடலைப் பருப்பு சட்னியை செய்யுங்கள். இந்த கடலைப் பருப்பு சட்னி, இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபம் மற்றும் குறைவான பொருட்கள் இருந்தாலே போதுமானது.

உங்களுக்கு கடலைப் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கடலைப் பருப்பு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலைப் பருப்பு – 1/4 கப்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* வரமிளகாய் – 4

* கறிவேப்பிலை – சிறிது

* பூண்டு – 3 பல்

* புளி – 1 துண்டு

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வரமிளகாய் – 1

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இறக்கி, அவற்றையும் குளிர வைக்க வேண்டும்.

* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த வரமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், புளி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் வரமிகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்கி இறக்கி சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கடலைப்பருப்பு சட்னி தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *