ஜஸ்ட் ரூ.10,000 முதலீடு, ஒரு பப்பாளி.. கிரண் மஜும்தார் பெரும் பணக்கார பெண்ணாக மாறிய பின்னணி இதுதான்!
பெங்களூர்: இந்திய தொழில் துறையில் கிரண் மஜும்தார் ஷா மிகவும் பிரபலமானவர். பெங்களூரின் பணக்காரப் பெண்மணி என்று அறியப்பட்ட கிரண் மஜும்தார் ஷா பல அறக்கொடைகளுக்கும் அறியப்படுபவர். 2023இல் அவர் ரூ.96 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
70 வயதான கிரண் பெரும்பாலும் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் கல்விக்காக இந்த நன்கொடைகளை தந்தார். மிகப் பெரிய வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த போதிலும் கிரண் மஜும்தார் ஷாவின் வாழ்க்கையை பற்றி பலருக்கும் தெரியவில்லை.
கிரண் மஜும்தார்-ஷா பயோகான் லிமிடெட் என்ற பயோகெமிக்கல் நிறுவனத்தை நிறுவியவர் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும். தற்போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.34700 கோடிக்கு மேல் உள்ளது.
கிரண் மஜும்தார்-ஷாவை ஒரு வெற்றிகரமான இந்திய தொழிலதிபராக பலர் அறிந்திருந்தாலும், அவர் ஒரு எளிய பின்னணியில் இருந்து கோடீஸ்வரராக மாறியது பற்றி பலருக்கும் தெரியாது.
1953 இல் பிறந்த கிரண் மஜும்தார்-ஷா பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். டாக்டராக விரும்பினார். ஆனால் அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்காததால் அவரது டாக்டர் கனவு நிறைவேறவில்லை.
பின்னர் அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மால்ட்டிங் மற்றும் ப்ரூயிங் படித்தார். 1975 இல் மாஸ்டர் ப்ரூவர் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, கிரண் மஜும்தார்-ஷா 1978 இல் பயோகான் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அவர் ஒரு சிறிய கேரேஜில், மொத்தமே, வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் பயோகான் நிறுவனத்தைத் தொடங்கினார். பப்பாளியில் இருந்து பாப்பைன் (papaya papain) என்ற நொதியைப் பிரித்தெடுப்பதன் மூலம் பயோகான் தனது வணிகத்தைத் தொடங்கியது.
இறைச்சியை எளிதாக வேக வைப்பதற்கு பாப்பைன் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பீர் தெளிவுபடுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஐசிங்க்ளாஸ் நொதியை பிரித்தெடுக்கும் தொழிலிலும் இறங்கியது இவர் நிறுவனம். கிரண் மஜும்தார்-ஷா ஒரே வருடத்துக்குள் வெற்றியடைந்தார். பயோகான் இந்த நொதிகளை அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்த முதல் நிறுவனமாக ஆனது.
தற்போது, பயோகான் சந்தை மதிப்பு ரூ.34700 கோடி ஆகும். கிரண் மஜும்தார்-ஷாவின் சொந்த நிகர மதிப்பு ரூ.23247 கோடி என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. ஆக மொத்தம், ஒரு பப்பாளி ஒரு தொழிலதிபர் வாழ்க்கையை மாற்றிவிட்டது. பேரிச்சம்பழம் கொட்டையிலிருந்து பர்ப்யூம் எடுப்பேன் என்று, விவேக் ஒரு படத்தில் தொழில் ஐடியாவோடு வந்ததை காமெடியாக கடந்து சென்றிருப்போம். ஆனால், பப்பாளியில் இருந்து பாப்பைன் என்ற ஒரு வகையான என்சைம், தயாரித்து பணக்காரராகியுள்ளார் கிரண் மஜும்தார் என்றால், நம்ப முடிகிறதா.