இத மட்டும் பண்ணுங்க, புண்ணியமாக போகும்..! அரசிடம் வின்பாஸ்ட் கோரிக்கை..!!
எலான் மஸ்க்-கிற்கு சொந்தமான டெஸ்லா கார் நிறுவனம் தயாரக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு போட்டியாக பல உலகளாவிய நிறுவனங்கள் இருந்தாலும், வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
டெஸ்லா இந்தியாவுக்கு இப்போ வரேன், அப்போ வரேன் என பூச்சாண்டி காட்டி வரும் வேளையில், வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அரசு தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும் என்று வின்பாஃஸ்ட் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வின்பாஃஸ்ட் நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் ஒரு உற்பத்தி ஆலையை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அந்த ஆலையில் அடுத்த ஆண்டு மத்தியில் இருந்து உற்பத்தி தொடங்கிவிடும்.
முதலில் உள்ளூர் மார்க்கெட் தேவைக்கு உற்பத்தியை செய்துவிட்டு பின்னர் ஏற்றுமதிக்கான உற்பத்தியை செயல்படுத்துவதற்கு வின்பாஃஸ்ட் திட்டமிட்டுள்ளது என்று அதன் சிஇஓ ஃபாம் சான் சாவ் தெரிவித்தார்.
இந்த உற்பத்தி ஆலைக்காக தமிழ்நாடு மற்றும் வின்பாஃஸ்ட் நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தொடக்கத்தில் 500 மில்லியன் டாலர் முதலீட்டில் இருந்து படிப்படியாக 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இது முதல் ஐந்தாண்டுகளுக்கான திட்டமாகும்.
எலான் மஸ்க்கின் டெஸ்லாவைப் போல வின்பாஃஸ்ட்டும் முழுவதும் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனத்துக்கான இந்தியாவின் 100 சதவீத இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இந்தக் கோரிக்கையை உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்தக் கோரிக்கையை இந்திய அரசு பரிசீலித்து வந்தாலும் இதுவரை அதுபற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி கருத்து தெரிவிக்க அரசு தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது.
வின்பாஃஸ்ட் நிறுவனத்தின் இந்திய சிஇஓவான ஃபாம் சான் சாவ் இதுபற்றி கூறுகையில், எங்கள் நிறுவனம் இறக்குமதி வரியைக் குறைக்குமாறு கேட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களுக்கு இரண்டாண்டுகளுக்கு 70 முதல் 80 சதவீதம் வரை வரி குறைப்பை செய்யுங்கள் எனக் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் வின்பாஃஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கும்.
இது தொடர்பாக இந்திய அரசின் முடிவை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் உற்பத்தி ஆலையின் கட்டுமானத்தை வின்பாஃஸ்ட் நிறுவனம் தொடங்கி விட்டது.
வின்பாஃஸ்ட் நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கப்பட்டு இந்திய மார்க்கெட்டுக்கு வந்துவிட்டால் நிச்சயமாக உள்நாட்டு நிறுவனங்களுக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்துக்கும் கடும் போட்டியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.