திடீரென அதிகரிக்கும் சுகர் லெவலை குறைக்க பாலுடன் இதை சேர்த்து குடிச்சா போதும்
உலக அளவில் நீரிழிவு நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகமாகின்றது. இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அதன் பிறகு அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மையாகும். அதுவும், இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்று கூட அழைக்கப்படுகின்றது.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் உண்வில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அனைத்து உணவுகளையும் இவர்களால் உட்கொள்ள முடியாது. பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetes Patients) எதை உட்கொள்ளலாம், எதை உட்கொள்ளக்கூடாது என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கின்றது.
பால்: பரிபூரண உணவு
நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். எனினும், போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதையும் அவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். பால் ஒரு பரிபூரண உணவாக கருதப்படுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு பால் ஒரு நல்ல தேர்வாக கருதப்படுகின்றது. ஆனால், நீரிழிவு நோயாளிகள் எப்போது, எப்படி பாலை உட்கொள்ள வேண்டும் என்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் எப்போது, எப்படி பால் உட்கொள்ள வேண்டும்?
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், காலை உணவில் பால் உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நன்மை அளிக்கும் என கூறுகிறார். பால் உட்கொள்வது கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை குறைக்கிறது. மேலும் இது இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவையும் (Blood Sugar Level) குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பால் பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
1. பாலுடன் இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை (Cinnamon) நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த மசாலாவாக கருதபப்படுகின்றது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் பல உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை பால் மிகவும் நல்லதாக இருக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு உடல் ஆரொக்கியத்தையும் மேம்படுத்தும்.
2. பாதாம் பால்
பாதாம் (Almonds) பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வித ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இதை பாலுடன் சேர்த்து உட்கொள்வதால், இதன் நன்மைகள் பன்மடங்காக அதிகரிக்கும். பாதாம் பாலில் கலோரிகள் குறைவாக இருக்கின்றது. இதில் வைட்டமின் டி, வைட்டமின் ஈ, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
3. மஞ்சள் பால்
மஞ்சளில் (Turmeric) நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் பல வித பண்புகள் உள்ளன. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் அதிகம் உள்ளன. இதை பாலுடன் உட்கொண்டால், இதன் நன்மைகள் பெருகும். மஞ்சள் பால் பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு மிக ஏற்றதாக பார்க்கப்படுகின்றது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக மஞ்சள் பால் உட்கொள்ளலாம். இதை குடிப்பதால் இன்சுலின் சமநிலையை பராமரிக்க முடியும்.
நீரிழிவு நோயாளிகளுக்கான பிற குறிப்புகள்:
அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது. உணவை தவிர வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி, யோகாசனங்கள் ஆகியவையும் அவசியமாகும். இது தவிர உறக்கமின்மை, மன அழுத்தம், உடல் உப்பசம், உயர் கொலஸ்ட்ரால் ஆகியவையும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை அதிகரிக்கும்.