#JUST IN:அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி..!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்தவரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கீடு செய்தது திமுக.மேலும், இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவை பொறுத்தவரை தற்போது வரை யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஃபார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
தமிழகத்தில் மட்டும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி. அகில இந்திய பார்வர்டு கட்சியின் இந்த நடவடிக்கை திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.