ஒரே ஒரு சிகரெட்!.. முள்ளும் மலரும் பட வாய்ப்பை தட்டி தூக்கிய ரஜினி.. இவ்ளோ விஷயம் நடந்திருக்கா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஆடுபுலி ஆட்டம் படத்தில் தான் முதன் முதலில் சந்தித்தார் இயக்குனர் மகேந்திரன். இந்தப் படத்தில் கமலும், ரஜினியும் இணைந்து நடித்து இருந்தனர். அந்தப் படத்திற்குக் கதை வசனம் எழுதியவர் இயக்குனர் மகேந்திரன். அவருக்கு தீவிரமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஒருநாள் படப்பிடிப்பின்போது மேக் அப் அறையில் அமர்ந்து வசனத்தை சரிபார்த்துக் கொண்டு இருந்தார் மகேந்திரன். அப்போது அவரிடமிருந்த சிகரெட் காலியாகி விட்டது.
அறையில் இருந்து வெளியே வந்தார். சிகரெட் வாங்க பக்கத்தில் யாராவது பசங்க இருக்காங்களான்னு பார்த்தார். அங்கு யாருமே இல்லை. கடைகளும் இல்லை. அப்போது பக்கத்து அறையில் இருந்து சிகரெட் புகை வந்தது.
மிகுந்த மகிழ்ச்சியுடன் பக்கத்து அறைக்குச் சென்றாராம் மகேந்திரன். அங்கு சென்று பார்த்தால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருந்தாராம். அவரிடம் சிரித்தபடி பேசிய மகேந்திரன், இந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதுவதாகக் கூறினாராம். தொடர்ந்து ஒரு சிகரெட் கிடைக்குமா என்றும் கேட்டாராம்.
அதற்கு ரஜினியும் புன்னகைத்தபடியே, சிகரெட் பாக்கெட்டை நீட்ட, அதில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டாராம் மகேந்திரன். அப்படித் தொடங்கியது தான் ரஜினி – மகேந்திரன் நட்பு. மிகக் குறுகிய காலத்திலேயே நெருங்கிய நட்பானதாம்.
அப்போது ராயப்பேட்டையில் ஒரு மாடிவீட்டில் குடியிருந்தாராம் ரஜினி. அந்த வீட்டில் விடிய விடிய மகேந்திரனும் ரஜினியும் சினிமாவைப் பற்றிப் பேசுவார்களாம். அந்த சந்திப்பில் தான் ரஜினியின் நடிப்பு எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டார் மகேந்திரன். அப்படித்தான் முள்ளும் மலரும் படத்தில் காளியாக வரும் வேடத்திற்குப் பொருத்தமானவர் ரஜினிதான் என முடிவு செய்தாராம் மகேந்திரன்.
கதையைக் கேட்ட அடுத்த நிமிடமே ரஜினி அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அந்தப்படத்தில் காளி கதாபாத்திரத்தின் மேல் கொண்ட ஈர்ப்பால் காளியாகவே மாறி விட்டாராம் ரஜினி. அந்தப் படத்தில் வழக்கமான ஸ்டைலான ரஜினியை நம்மால் பார்க்க முடியாமல் போனதற்குக் காரணம் இதுதானாம்.