இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலுக்கு கவலை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ
ரஃபாவில் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டு அமைச்சரிடம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை தெரிவித்தார்.
இஸ்ரேலிய அமைச்சர் பெஞ்சமின் காண்ட்ஸ்
தெற்கு காஸா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து இஸ்ரேலிய அமைச்சர் பெஞ்சமின் காண்ட்ஸ் உடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்தார்.
அப்போது அவர் இஸ்ரேல், காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள நிலைமை குறித்து பேசியதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ‘சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது மற்றும் தேவையானது என ட்ரூடோ தெரிவித்தார். ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, பணயக்கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கனடாவின் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
காஸாவில் இருந்து கனேடியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியேறுவதற்கு வசதியாக, இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆதரவின் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ
இந்த பேச்சுவார்த்தை குறித்து ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘காசா மற்றும் மேற்குக் கரையில் நிலவும் நிலைமை பற்றி, இன்று இஸ்ரேல் அமைச்சர் பெஞ்சமின் காண்டஸுடன் பேசினேன்.
ரஃபாவில் இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதல்களைப் பற்றி நான் கவலை தெரிவித்தேன். மேலும் நீடித்த அமைதியைப் பாதுகாப்பதற்கான இரு நாடுகளின் தீர்வை நோக்கிய முயற்சிகளை புதுப்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினேன்’ என கூறியுள்ளார்.