அசுரன் ரீமேக்கில் நடிக்க கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் விருப்பம்
சென்னை: திரைக்கு வந்த ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்த கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார், தற்போது தனுஷுடன் இணைந்து ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘தனுஷை அவரது முதல் படத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரிடம் என்னை நான் பார்க்கிறேன். அவர் நடித்த பல படங்களை பலமுறை நான் பார்த்து ரசித்துள்ளேன். எனக்கு அவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவர் அசைவம் சாப்பிட மாட்டார் என்பதால், படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு என் மனைவி சாம்பார் செய்து கொடுப்பார். தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரும் வந்து கிரிக்கெட் விளையாடுவார்கள்.
இதற்கு முன்பு வெளியான ‘ஜெயிலர்’ படத்துக்காக எனக்கு அதிகமான அன்பும், ஆதரவும் கொடுத்ததற்காக ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘அசுரன்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க விரும்புகிறேன். இளம் வயது மற்றும் வயதான தோற்றத்தில் நடிப்பது மிகவும் சிரமம். அந்த வேடங்களில் தனுஷ் சிறப்பாக நடித்திருந்தார்’ என்றார்.