கரூர் சிவசாமி.. கொசுவலை உற்பத்தி செய்து கோடீஸ்வரரான வியக்க வைக்கும் கதை..!!
மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு தரக்கூடிய எந்த ஒரு தொழிலும் நிச்சயம் வெற்றி பெறும். அப்படி உலகமே எதிர்கொண்டிருக்கும் ஒரு பிரச்னை கொசு. கொசுக்களால் பரவும் நோய்களால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்களை இழக்கிறோம்.
இதற்கு தீர்வு காணும் வகையில் கொசுவலை தயாரித்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வெற்றி கண்டுள்ளார் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசாமி.
கல்லூரி படிக்கும் போது வந்த ஐடியா: கரூர் மாவட்டம் இந்தியாவில் கொசுவலை தயாரிக்கும் ஒரு மையம் என கூறலாம். அப்படி கரூரை சேர்ந்த சிவசாமி, கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது ஒரு நாள் கொசு வலை தயாரிக்கும் ஆலைக்கு சென்றிருக்கிறார்.
அப்போது வருங்காலத்தில் இதே போல ஒரு ஆலையை நிறுவி , நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கொசுவலை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தார். அப்போது LLIN எனப்படும் Long-lasting insecticidal net வகை வலைகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருந்தது. எனவே அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசுவலை ஆலையை நிறுவும் பணிகளை மேற்கொண்டார்.
அறையில் இருந்து தொடங்கிய முதல் ஆலை: முதலில் தொழில் தொடங்க ஆர்வம் இருந்தாலும் போதிய பணம் இல்லை. எனவே தனது வீட்டின் ஒரு அறையையே ஆலையாக மாற்றினார். ரூ.1.25 லட்சம் கடன் வாங்கி தனது அறையில் இருந்து கொசுவலை உற்பத்தியை தொடங்கினார்.
2012ஆம் ஆண்டு துராநெட் நிறுவனத்தை கையகப்படுத்தினார். படிப்படியாக வளர்ச்சி அடைந்த அவர் , வெண்ணைமலையில் ஷோபிகா இம்பெக்ஸ் என்ற பெயரில் ஆலையை நிறுவினார்.
இங்கு தயாரிக்கப்படும் கொசுவலைகள் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, சீனா, மலேசியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மலேரியா ஒழிப்பு எனும் மையக்கரு: நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழிலை அப்டேட் செய்து வரும் சிவசாமி, மலேரியா ஒழிப்பு எனும் மையக்கருவை கையில் எடுத்தார். ஆப்பிரிக்க நாடுகளில் கொசுக்களால் பரவக்கூடிய மலேரியாவால் மக்கள் இறப்பது அதிகம்.
எனவே மலேரியாவை ஒழிக்க இந்த கொசுவலையை பயன்படுத்துங்கள் என விளம்பரம் செய்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கொசுவலைகளை ஏற்றுமதி செய்கிறார்.
சொத்து மதிப்பு ரூ.2,400 கோடியாக உயர்வு: சிவசாமியின் கடின உழைப்புக்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. தற்போது இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2,400 கோடி ரூபாய். ஹரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2022இன் படி, சிவசாமி 582ஆவது இடத்தில் உள்ளார். இவரது நிறுவனம் மாதத்திற்கு 50 லட்சம் கொசுவலைகளை தயாரிக்கிறது.