Kavin: சிம்புவின் வழியில் கவின்? ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவதாக பிரபல தயாரிப்பாளர் குமுறல்!
டெலிவிஷன் தொடர்களில் நடிப்பவர்கள் எல்லாம் சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் திரையுலகில் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டால், அது பெரிய கேள்விக்குறிதான். அப்படி, தனக்கு சின்னத்திரையிலும் பெரிய திரையிலும் கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்துக்கொண்டு தற்போது வளர்ச்சி பெற்று வரும் ஹீரோவாக இருப்பவர், கவின். ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவை அனைத்தும் ஹிட் அடித்து விட்டதால், இவர் தற்போது கொஞ்சம் சீன் போடுவதாக திரையுலக வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. அப்படி அவர் என்ன செய்தார்? இங்கு பார்ப்போம்.
டாடா படம் வெற்றி:
கவின், தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் ஒரு சில படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் ஹீரோவாக நடித்த படங்களும் நல்ல ஹிட் அடித்துள்ளன. கடந்த ஆண்டு அவர் நடித்திருந்த ‘டாடா’ படம் வெளியானது. இந்த படத்தில் அவர் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக, அபர்ணா தாஸ் நடித்திருந்தார். இந்த படத்தை கணேஷ் கே. பாபு என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலையும் குவித்தது. திரையரங்கில் வெளியான போது இப்படத்தை காெண்டாடிய ரசிகர்கள், ஓடிடியில் வெளியான போதும் நல்ல வரவேற்பினை அளித்தனர். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு கவின், தொடர்ந்து 2 படங்களில் கமிட் ஆனார்.
சிம்புவின் வழியில் கவின்?
நடிகர் சிம்பு மீது வெகு நாட்களாக இருந்த குற்றச்சாட்டு, அவர் படப்பிடிப்பிற்கு லேட்டாக வருகிறார் என்பதும், சமயங்களில் படப்பிடிப்பிற்கே வருவதில்லை என்பதும்தான். இப்போது அதே வழியில் நடிகர் கவினும் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து, ஒரு திரைப்பட தயாரிப்பாளர் பிரபல பத்திரிகை ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ளார். அவர், அதில் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். கவின் குறித்து பேசியுள்ள அவர், கவின் சமீப காலமாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஒழுங்காக சேர்ந்து பணியாற்றுவதில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், அவர் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில்லை என்றும், மிகவும் லேட்டாக வருவதாகவும், அப்படி வந்தாலும் வெகு நேரம் கேரவனிலேயே அமர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால், பிற நடிகர்களுக்குறிய காட்சிகளை படம் பிடிக்க தாங்கள் ஆளாக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
நடிகர்கள் படப்பிடிப்பிற்கு லேட்டாக வந்தால் என்ன நடக்கும்?
படங்களில் நடிக்க முதலில் நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டு, பின்னர்தான் அந்த நாட்களில் ஷூட்டிங்கை வைப்பர். அந்த நாளின் படப்பிடிப்பிற்காக, பலர் சேர்ந்து உழைப்பர். இவையனைத்தும், அந்த நாளில் நடைபெறும் ஒரு காட்சிக்காகவோ அல்லது காட்சிகளுக்காகவோ அமைக்கப்படும். இதற்கான ப்ரோடக்ஷன் செலவுகள் மட்டும் ஏராளம். படப்பிடிப்பிற்கு வர வேண்டிய நடிகர் லேட்டாக வந்தால், அதற்கான செலவுகள் அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் விடியும். இதனால்தான், பெரிய பெரிய நடிர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்துவிடுவர். காரணம் அவர்களுக்கு தான் லேட்டாக வந்தால் என்ன நடக்கும் என்பது தெரியும்.