லாட்டரியில் 34 கோடி அள்ளிய கேரள சேட்டன்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் அடித்த ஜக்பாட்..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ராஜீவ் அரிக்காடுவுக்கு , அபுதாபி லாட்டரியில் 34 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இதனால் அவரது குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கிறது.
கேரளா மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் அரிக்காடு ஐக்கிய அரபு அமீரகத்தில் அல் ஜன் நகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
அவரும், அவரது நண்பர்களும் இணைந்து ‘அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி ‘ வாங்கியுள்ளனர். அதில் அவருக்கு 15 மில்லியன் திர்ஹாம்கள் (சுமார் ₹ 33.9 கோடி) பரிசாக கிடைத்துள்ளது. ராஜீவ் வாங்கிய 037130 என்ற எண் கொண்ட டிக்கெட் தான் பரிசை பெற்று தந்துள்ளது.
குழந்தைகளின் பிறந்த தேதியை கொண்டு தேர்வு: கிட்டதட்ட 3 ஆண்டுகளாக அபுதாபி பிக் டிக்கெட்டில் லாட்டரி வாங்கி வருகிறார் ராஜீவ். ஆனால் இந்த முறை தான் அவருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டியுள்ளது.
இந்த முறை அவரும் அவரது மனைவியும் சேர்ந்து டிக்கெட்டை தேர்வு செய்துள்ளனர். மொத்தம் 2 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். அதற்கு சலுகையாக லாட்டரி நிறுவனம், 4 டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது. அதில் ஒரு டிக்கெட்டுக்கு 33 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
தங்களின் பிறந்த தேதியான 7 மற்றும் 13 ஐ அடிப்படையாக கொண்டு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்திருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என ராஜீவ் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இதே போல வாங்கிய டிக்கெட்டில் நூலிழையில் 1 மில்லியன் திர்ஹாம்ஸை நான் தவறவிட்டேன், ஆனால் இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி ஆகிவிட்டேன் என ராஜீவ் கூறியுள்ளார்.
20 பேராக பரிசு தொகையை பகிர முடிவு: தன்னுடைய குழுவில் 20 பேர் உள்ளனர் என்றும், அனைவருமே தொழிலாளர்கள் என்றும் கூறியுள்ள ராஜீவ், வழக்கம் போல இந்த முறையும் 20 பேரும் சேர்ந்தே லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினோம், எனவே பரிசு தொகையை நான் உட்பட 20 பேரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வோம் என தெரிவித்துள்ளார். தனது குழுவில் சிலருக்கு வேலை பறிபோய் விட்டதால் இந்த பரிசு தொகை அவர்களுக்கு பெரிதும் உதவும் என தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியில் வானத்தில் பறப்பதை போல உணர்வதாக தெரிவித்துள்ள ராஜீவ், தொடர்ந்து ஐக்கியஅரபு அமீரகத்தில் பணியாற்ற போவதாகவும், தொடர்ச்சியாக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.