அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகளுடன் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட கேரள தம்பதியர்… புதிய தகவல்கள்

அமெரிக்காவில், கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தங்கள் இரட்டைப் பிள்ளைகளுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பான புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட குடும்பம்
திங்கட்கிழமை, அதாவது, பிப்ரவரி 12ஆம் திகதி, அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள வீடு ஒன்றிற்கு அனுப்பப்பட்ட பொலிசார், அங்கு படுக்கையறை ஒன்றில் இரண்டு சிறுவர்கள் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிடும்போது, குளியலறையில் இருவர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யார் அவர்கள்?
உயிரிழந்தவர்கள் ஆனந்த் ஹென்றி (38), அவரது மனைவியான ஆலிஸ் பிரியங்கா (37) மற்றும் தம்பதியரின் இரட்டைப்பிள்ளைகளான நோவா மற்றும் நீதன் (4) என தெரியவந்துள்ளது. நேற்று அந்தப் பெண்ணின் பெயர் ஆலிஸ் பிரியங்கா என கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது பெயர் ஆலிஸ் பென்ஸிகர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் மென்பொறியாளர்களாக பணியாற்றிவந்துள்ளார்கள்.

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களான ஆனந்தும் ஆலிஸும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில், 2 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய ஒரு வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார்கள்.

புதிய தகவல்கள்
தற்போது, அந்த துயர சம்பவம் தொடர்பாக சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அதாவது, குழந்தைகள் பிறப்பதற்கு முன், கருத்துவேறுபாடு காரணமாக ஆனந்தும் ஆலிஸும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து சிறிது காலம் பிரிந்து வாழ்ந்துள்ளனர். ஆனால், அதற்குப் பிறகு மீண்டும் இணைந்து வாழத் துவங்கி, அதற்குப் பின்தான் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்நிலையில், ஆனந்த், தன் மனைவியையும் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். ஆலிஸ் உடலில் பல குண்டுக்காயங்கள் இருந்த நிலையில், ஆனந்த் தலையில் மட்டும் ஒரே ஒரு குண்டுக் காயம் இருந்துள்ளது. குளியலறையில் உயிரிழந்து கிடந்த கணவன் மனைவிக்கருகே கிடந்த துப்பாக்கி ஒன்று, ஆனந்த் பெயரில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், குழந்தைகள் உடலில் துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் இல்லை. ஆகவே, அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்னும் விடயம் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகுதான் தெரியவரும். அத்துடன், இந்த துயர சம்பவம், சனிக்கிழமை மதியமே நடந்திருக்கக்கூடும் என்றும் பொலிசார் கருதுகிறார்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *