இங்கிலாந்தில் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த கேரள பெண்: அதிரவைத்துள்ள தகவல்
இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார் கண்ட காட்சி
கடந்த வாரம், வியாழக்கிழமையன்று, அதாவது, பிப்ரவரி மாதம் 8ஆம் திகதி, காலை 6.30 மணியளவில், இங்கிலாந்திலுள்ள Uckfield என்னுமிடத்திலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார், அங்கு 13 மற்றும் 9 வயதுடைய இரண்டு பிள்ளைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதைக் கண்டு உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களுடன் அதே வீட்டிலிருந்த, அவர்களுடைய தாயாகிய ஜிலுமோள் ஜார்ஜ் (38) என்னும் பெண்ணும் தற்கொலைக்கு முயன்றதாக கருதப்படும் நிலையில், அவரையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள சந்தேகம்
ஜிலுமோளிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்ததாக சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மூவரும் சிகிச்சைக்குப்பின் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட, கைது செய்யப்பட்ட ஜிலுமோள், Brighton மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டார்.
நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள அவர், மார்ச் மாதம் 8ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். இதற்கிடையில், சம்பவம் நடந்தபோது, ஜிலுமோளின் கணவர் வீட்டிலில்லை என கூறப்படுகிறது.