மீண்டும் காயமடைந்த கேகேஆர் கேப்டன்.. ஸ்ரேயாஸ் சொன்னது உண்மையா? ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம்?

கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயமடைந்துள்ளதால், ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளி வந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாததால், பிசிசிஐ ஒப்பந்தம் மறுப்பு, ரஞ்சி போட்டியில் விளையாடுவதை தவிர்க்க காயம் என்று பொய் கூறியது, பிசிசிஐ ஒப்பந்தம் மறுக்கப்பட்ட பின் உடனடியாக ரஞ்சி போட்டியில் விளையாடுவதாக அறிவித்து என்று ஸ்ரேயாஸ் ஐயரின் அந்தர் பல்டிகள் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வந்தது.
அதேபோல் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடாமல் கேகேஆர் அணியின் பயிற்சி முகாமில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்றதும் சர்ச்சையாகியது. இந்த நிலையில் ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், 2வது இன்னிங்ஸில் 95 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பியதாக பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங் செய்ய களமிறங்கவே இல்லை. இதுகுறித்து விசாரிக்கையில், பேட்டிங்கின் போதே ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுபிடிப்பு ஏற்பட்டது என்றும், அதற்காக 2 முறை சிகிச்சை எடுத்ததாக தெரிய வந்தது. இதன்பின் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளுக்காக மும்பை அணி நிர்வாகமும், ஸ்ரேயாஸ் ஐயரும் காத்திருக்கின்றனர்.
இதனிடயே கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முதுகு பிரச்சனை காரணமாகவே ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கவில்லை. சில நாட்களுக்கு முன்பாகவே முதுகு பிடிப்பு பிரச்சனை இருப்பதாக கூறியிருந்தார். இதனால் மீண்டும் முதுகு பிடிப்பு பிரச்சனையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிக்கியுள்ளதால், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று தெரிய வந்துள்ளது. இதனால் கேகேஆர் அணி நிர்வாகம் மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.