கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்.. இதை மட்டும் திமுக அரசு செய்துவிட்டால் ஓஹோ பாராட்டு மழைதான்!
சென்னை: பொங்கல் கொண்டாட்டங்களுக்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வடசென்னை பகுதி மக்கள் மணலி டூ கோயம்பேடு; கோயம்பேடு டூ கிளாம்பாக்கம் என அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த துயரத்தைப் போக்குவதற்கு விரைவான தீர்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளுமா? என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
வடசென்னையில் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா பகுதி நோக்கி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை தாண்டி கிளாம்பாக்கத்துக்கு பொதுமக்கள் வந்து தென்மாவட்ட பேருந்துகளை தேடி கண்டுபிடித்து ஏறுகின்றனர். இதனால் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்தோடு செல்லும் தங்களுக்கு மன உளைச்சல்தான் அதிகம் என குமுறுகின்றனர்.
எவ்வளவு உளைச்சல்: கிளாம்பாக்கம் சென்னை மாநகரில் இருந்து வெகுதொலைவில் செங்கல்பட்டுக்கு அருகே இருப்பது உண்மைதான். சரி கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டது. எண்ணூர், மணலி, திருவொற்றியூரில் பெருமளவு தென்மாவட்ட மக்கள் வசிக்கின்றனர். கிளாம்பாக்கத்தை எட்டிப் பிடிக்கவே 2,3 மணிநேரமாகிவிடுகிறது. இது பெரும் அயற்சியைத்தான் தருகிறது. இத்தகைய அலைச்சலுக்கும் மன உளைச்சலுக்கும் எளிதான தீர்வு ஒன்றையும் பொதுமக்களே முன்வைக்கின்றனர்.
பேருந்து நிலையங்கள் ஒருங்கிணைப்பு: அதாவது மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்குமான பேருந்துகளை இயக்கலாம். மாதவரத்தில் இருந்து மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்தினால் சென்னை மாநகருக்குள் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்த வெளிவட்ட சாலையில்தான் திருமழிசையும் இணைகிறது.
இப்படி சென்னையை சுற்றிய புறநகர் பேருந்து நிலையங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் போது மக்களின் அலைச்சலும் மன உளைச்சலும் இயல்பாகவே அகலும்; அரசுக்கும் நற்பெயரும் கிடைக்கும். இவ்வளவு செய்த தமிழ்நாடு அரசு செலவோடு செல்வாக சென்னை மாநகரை சுற்றிய அனைத்து புறநகர் பேருந்து நிலையங்களில் இருந்தும் ஆகக் குறைந்தபட்ச எண்ணிக்கையிலாவது அனைத்து மாவட்ட பேருந்துகளும் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வரலாம்.