இதை தெரிஞ்சிக்கோங்க..! மாதவிலக்கு காலங்களில் பெண்கள் இறைவழிபாட்டை மேற்கொள்ளலாமா?

எந்த மதமாக இருந்தாலும் இறைவனது திருப்பணியில் அதிகம் ஈடுபாடு செலுத்துவது பெண்கள் தான். வீட்டை தூய்மைப்படுத்தி பூஜை செய்து இறைவனை இல்லத்தில் நிறுத்தி வைப்பதிலும், ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளிலும் பெண்களின் பங்கு இன்றியமையாதது. சிவப்பெருமானின் பாதியான பார்வதிதேவியையும், மகாவிஷ்ணுவின் துணையான லஷ்மி தேவியையும்,மாகாளியையும், மகமாயி மாரியையும், துர்க்கையையும், சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களையும் வழிபடுகிறோம். ஆனால் பெண்கள் மாதந்தோறும் இயற்கை சுழற்சிக்கு உட்படும் காலகட்டங்களில் தீட்டு.. என்றும் வீட்டுக்கு விலக்கு என்றும் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். காலங்கள் மாறிவிட்ட நிலையிலும் இத்தகைய தீட்டு காலங்களில் மட்டும் பெண்களை தெய்வத்திடமிருந்து விலக்கி வைக்கலாமா?

தாய்மை என்னும் அற்புதமான வரம் பெற்றவள் பெண். அதனால் தான் பெண்களை தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று ஒப்பிட்டு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்து மத மரபுகளின் படி மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள்,இந்த சமயத்தில் வீட்டில் உள்ள பூஜையறையில் நுழையவோ ஆலயங்களில் நுழையவோ அறிவுறுத்தப்படவில்லை. பழங்காலத்தில் மாதவிலக்கு ஏற்படும் போது பெண்கள் தனி அறையில் வைக்கப்படுவார்கள். தூய்மையான பொருள்களைத் தொடுவதற்கு கூட அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்கு வேதத்தில் கதை ஒன்று உண்டு. இந்திரன் ஒரு பிராமணனை கொன்று பிரம்மஹத்தி தோஷம் பெற்றான். தேவர்களின் அரசனான இந்திரன் செல்வ செழிப்போடு அழகுற வாழ்பவனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தால் முகம் கறுத்தது. பார்க்கவே கோரமாக காட்சி அளித்தான். முகத்தில் சங்கட ரேகைகளும், கண்களும், உறுப்புகளும் அழுதன. குற்றங்களிலேயே கொடிய குற்றம் பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷத்தைப் பெற்றவனுக்கு எவ்வித பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவது தான் இதற்கான தண்டனை.வேண்டுமானால் தோஷத்தை யாராவது விரும்பி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் யார் ஏற்றுக் கொள்வார்கள்.

பூமாதேவியைச் சந்தித்த இந்திரன் எனது ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக்கொள்ளேன் என்று அழுதான். தோஷம் முழுவதும் எடுத்துக் கொண்டால் என் மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு சந்தோஷம் கிடைக்காது. ஒரு பகுதியை வேண்டுமானால் எடுத்து கொள்கிறேன். பதிலுக்கு நீ ஒரு வரம் தர வேண்டும். பூமி பிளந்தால் மீண்டும் சேரும் வரம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். அப்படி வாங்கிய தோஷத்தால் பாதிக்கப்பட்ட பகுதிதான் பாலைவனமாகவும், தரிசு நிலங்களாகவும் மாறியதாக சொல்வார்கள். அடுத்ததாக மரங்களிடம் சென்று ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்றான் இந்திரன். நாங்கள்வெட்டப்பட்டாலும் மீண்டும் துளிர்க்கும் வரம் கொடு என்று கேட்டு அவைகள் சிறிது தோஷம் வாங்கிக் கொண்டன. அந்த தோஷம் தான் மரங்களில் கோந்தாக வழிகிறது. இந்திரனிடம் இன்னும் பாதி ப்ரம்மஹத்தி தோஷம் இருந்தது. இந்திரன் ஸ்தரி ஸம்ஸாதம் என்னும் பெண்கள் மாநாட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்களிடம் தன்னுடைய தோஷத்தை எடுத்துக் கொள்ளும்படி வேண்டினான். உனக்கு உதவ விரும்புகிறோம்,பதிலுக்கு எங்களுக்கு என்ன தருவாய்?என்று கேட்டார்கள். என்ன வேண்டுமானாலும் என்று சொன்னான் இந்திரன். நாங்கள் பிரசவிக்கும் வரை எங்கள் கணவருடன் தேகசம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். அப்படியே ஆகட்டும் என்ற இந்திரன்.எஞ்சியிருந்த ப்ரம்மஹத்தி தோஷத்தை பெண்களிடம் கொடுத்து அவன் பழைய உருவத்தைப் பெற்றான். அந்த தோஷம் தான் பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக்கதை.

சமஸ்கிருதத்தில் இந்த மூன்று நாட்களை பகிஷ்டை என்று சொல்வார்கள்.அதாவது வெளியில் வை.. விலக்கி வை என்று பொருள். நம் முன்னோர்கள் சொல்லியதுபடி பார்த்தால்,அந்த மூன்று நாட்களில் பெண்கள் உடலளவிலும்,மனதளவிலும் பலவீனமாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றி எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். இந்த சக்திகள் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை பலவீனமாக மாற்றும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். உங்கள் குலதெய்வம் பெண் கடவுள்களாக இருந்தால் நீங்கள் கோவிலுக்கு செல்லலாம். பூஜைக்குரிய சடங்குகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நின்று வழிபட்டு வரலாம். ஆனால் இத்தகைய நிலை தேவையில்லை என்பதால் தான் கோயில்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் அதே உங்கள் குலதெய்வம் ஆண் கடவுள்களாக இருந்தால் உங்களுக்கு பிரச்னைகள் நிச்சயம் தோன்றும். உங்கள் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் கோயில்களில் உள்ள அதீத சக்தியை தாங்கும் நிலையில் இருக்காது.மேலும் சிவன் அல்லது முனீஸ்வரர் ஆலயமாக இருந்தால்,அந்த இடம் நெருப்புத்தன்மை உள்ள இடமாக கருதப்படும்.அப்போது உங்கள் உடலில் உள்ள வெப்பமும், அந்த இடத்தின் வெப்பமும் அதிகரித்து அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்படும். நீங்கள் காடுகள், மலைகள் சுற்றியுள்ள இடத்தில் உள்ள ஆலயத்தில் இருந்தால் அருகிலுள்ள விலங்குகளால் ஈர்க்கப்படும். விலங்குகளை ஆக்ரோஷம் கொள்ள வைத்து அந்த ரம்மியமான சூழ்நிலையை கெடுக்கும் போது ஒரு வித அபசகுணமாக பார்க்கப்படும். ஆக உடல் சோர்வுடனும் மன சஞ்சலத்துடனும் தெளிவில்லாத நிலையில் இறைவனை எப்படி வழிபட முடியும் என்பதாலேயே தான் கோயில்களிலும், பூஜை வழிபாடுகளிலும் ஒதுங்கியிருக்க வலியுறுத்தப்பட்டார்கள். நாளடைவில் இந்த ஒதுக்க நிகழ்வே ஒதுக்கிவைக்கப்பட்டதாக மருவி போயிற்று.

நம் உடலிலிருந்து வெளியேறும் எதிர்மறை ஆற்றலால் நமக்கு அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படலாம் என்பதை மனதில் கொண்டு தான் பெண்கள் மாதவிலக்கு சமயத்தில் ஒதுக்கி அல்ல ஒதுங்கியிருக்க வலியுத்தப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் நல்லதை நினைத்து நல்லதை மட்டுமே கூட வழிபடலாம். ஆனால் இவற்றை உங்களுக்குள் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த கடவுளை பிடித்த முறையில் தொட்டு பூஜை செய்ய முடியவில்லையென்றாலும், மனதால் அவரது நாமத்தை ஜபியுங்கள். இதை யாரும் தடுக்க முடியாது. உடல் ரீதியான நிலைகள் எத்தகைய காலத்திலும் ஆன்மிகத்தை மாசுபடுத்தாது. பூஜை, புனஸ்காரம் என்னும் நிலையை இந்த நாட்களில் தள்ளி வைத்து மனதை அமைதியான முறையில் இறைவனிடம் செலுத்துங்கள். மாதவிலக்கு என்னும் இயற்கை சுழற்சியால் உங்களை இறைவனிடமிருந்து ஒதுக்கி வைக்கவில்லை. உங்கள் நலம் கருதி ஒதுங்கியிருங்கள் என்று வலியுறுத்தப்படுகிறது அவ்வளவே…

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *