இன்போசிஸ் நாராயணமூர்த்தி-யின் பெருமைமிக்க தருணம் எது தெரியுமா?

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடி என்ற உடன் நம் நினைவுக்கு வருபவர் இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி. 1981 ஆம் ஆண்டு இன்போசிஸை நிறுவி 2002ஆம் ஆண்டு வரை அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார்.

கிட்டதட்ட 43 ஆண்டுகளாக இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இன்றளவும் இன்போசிஸ் நிறுவனம் செயல்படுகிறது. ஒரு பெரிய நிறுவனத்தை கட்டி எழுப்பியவர் என்ற முறையில் நாராயணமூர்த்தியின் கருத்துகள் அனைவருக்கும் ஊக்கம் தருபவையாக இருக்கும். அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனர் என்ற முறையில் தன்னுடைய வாழ்க்கையின் பெருமைமிகு தருணம் எது என்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தியா டுடேவின் கான்கிளேவ் 2024 நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நாராயண மூர்த்தி , “இன்போசிஸ் நிறுவனர் என்ற முறையில் எனது சாதனைகள் அனைத்திலும் பெருமையாக நான் உணர்ந்தது ஒரு தருணத்தில் தான்.

நாஸ்டாக் சந்தையில் முதல் இந்திய நிறுவனமாக இன்போசிஸ் நிறுவனம் பட்டியலிடப்பட்ட அந்த தருணம் தான் தன்னுடைய வாழ்க்கையின் பெருமை மிகுந்த தருணம்” எனக் கூறினார். இன்போசிஸ் நிறுவனம் பட்டியலிடப்பட்ட அந்த தருணம் பரபரப்பாக இருந்தது ,இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் சாதிக்காத ஒன்றை நாம் சாதித்து இருக்கிறோம் என்ற பெருமைமிகு உணர்வு அப்போது ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார்.

உங்களுடைய மிகப்பெரிய வருத்தம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த நாராயண மூர்த்தி, குறிப்பிட்ட எதற்காகவும் வருத்தம் எதுவுமில்லை என்றார். “எனக்கு ஏதேனும் வருத்தங்கள் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் முதல் நாளிலிருந்து நாங்கள் ஜனநாயகத்துடனே நிறுவனத்தை நடத்தினோம். நாங்கள் செய்யாத சில துணிச்சலான விஷயங்கள் இருந்தன . ஏனெனில் ஜனநாயக ரீதியாக செயல்படுவதன் காரணமாக அவற்றை நாங்கள் செய்யவில்லை . அதனால் நிறுவனத்தின் வளர்ச்சி கூட சற்றே குறைந்தது. ஆனால் அதில் எங்களுக்கு வருத்தமில்லை ” என தெரிவித்தார். 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இன்போசிஸ் நிறுவனம் நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டது.

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதாமூர்த்தி இரு தினங்களுக்கு முன்பு , மாநிலங்களவை எம்பியாக பதவி ஏற்றார். இந்த தம்பதியின் மகள் பிரிட்டனில் செட்டிலாகிவிட்டார். அவரது கணவரும், இவர்களின் மருமகனுமான ரிஷி சுனக் தான் தற்போது பிரிட்டன் பிரதமராக இருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *