கோடக் மஹிந்திரா வங்கிக்கு ஜாக்பாட்.. ஒரே டீலில் 5560 கோடி ரூபாய் வந்தது..!

கோடக் மஹிந்திரா வங்கியின் பொது காப்பீட்டு கிளையான கோடக் ஜெனரல் இன்சூரன்சில், சுரிச் இன்சூரன்ஸ் குழுமம் 70% பங்குகளை 671 மில்லியன் டாலர், அதாவது 5560 கோடி ரூபாய் தொகையை செலுத்தி வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சுரிச் இன்சூரன்ஸ் குழுமம் முதலில் 51% பங்குகளை மட்டுமே கோடக் ஜெனரல் இன்சூரன்சிஸ் நிறுவனத்தில் வாங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தற்போது முழுத் தொகையும் முன்பணமாக செலுத்தி பெரும்பான்மை பங்குகளை (70%) வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்திய சந்தையில், பொது காப்பீட்டு நிறுவனத்தில் மேற்கொள்ளும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கோடக் ஜெனரல் இன்சூரன்சின் மதிப்பு 7943 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய ஒப்பந்த மாற்றத்தால் இம்மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை என கோடக் மஹிந்திரா வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.
முந்தைய ஒப்பந்தத்தின்படி, முதலில் 51% பங்குகளை ரூ.4051 கோடி செலுத்தி வாங்கி, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கூடுதலாக 19% பங்குகளை சுரிச் நிறுவனம் வாங்க திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது முழுத் தொகையும் அதாவது ரூ.5560 கோடியை பணமாக செலுத்தி, 70% பங்குகளை வாங்கும் வகையில் ஒப்பந்தம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதர ஒப்பந்த நிபந்தனைகள் அனைத்தும் முன்பே அறிவிக்கப்பட்டபடி மாற்றமின்றி இருக்கும் என கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது. இந்திய முதலீட்டு சந்தையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய அசட் மேனேஜ்மென்ட் நிறுவனமான பிளாக்ஸ்டோன், முகேஷ் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் உடன் இணைந்து மியூச்சவல் பண்ட் துறையில் இறங்க திட்டமிட்டு கூட்டணி நிறுவனத்தை உருவாக்க உள்ளது.