இந்த ரூட் ஆம்னி பஸ்களுக்கு மட்டும் கோயம்பேடு.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னையில் இருந்து தென் பகுதிகளுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், ஈசிஆர், மேற்கு மார்க்கத்திற்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது.
தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை நோக்கி செல்லும் (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) அனைத்து ஆம்னி பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போல் திட்டமிட தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பயணிகளின் வசதிக்கு ஏற்ப RED BUS, ABHI BUS உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் உரிய மாற்றங்களை செய்யவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல், அவர்களை தேவையின்றி சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR மார்க்கம்) மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள், வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் வழக்கம் போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னையில் இருந்து செங்குன்றம், சித்தூர் வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், கிழக்கு கடற்கரை சாலை, வேலூர் மார்க்கமா செல்லும் பயணிகள் கோயம்பேட்டில் இருந்தே தங்களது ஊர்களுக்கு பயணிக்கலாம்.