திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியின் மறுநாள் வரும் கிருத்திகை முக்கோட்டி கிருத்திகை என பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று முன்தினம் ஏகாதசி நேற்று கிருத்திகை விழா ஒட்டி திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.காலை, 9:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று வார விடுமுறையான ஞாயிறு மற்றும் முக்கோட்டி கிருத்திகை என்பதால் தமிழகம்.
புதுச்சேரி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்தனர். பின் பொதுவழியில், பக்தர்கள் ஏழு மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று மூலவரை தரிசித்தனர்.அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர்.
திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.போக்குவரத்து நெரிசல்முருகன் கோவில் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் கடந்த, 14ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அனைத்து ரக வாகனங்கள் மற்றும் பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு தடை செய்யப்பட்டது. பக்தர்கள் படி வழியாக சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று முதல் மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லவும், கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதை மற்றும் திருத்தணி— அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.