டாடாவால் ஓங்கி கொட்டப்பட்ட குட்டு.. ஹூண்டாய் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த அடியை மறக்காது!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்திற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தால் மிகப் பெரிய அடி கடந்த டிசம்பர் மாதத்தில் விழுந்திருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா மோட்டார்ஸ் விற்பனையிலேயே ஹூண்டாய் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்து இருக்கின்றது. அதாவது, 2023 டிசம்பர் மாதத்தில் விற்பனையில் மிகப் பெரிய எண்ணிக்கையை டாடா மோட்டார்ஸ் பெற்றிருக்கின்றது. இதன் விளைவாக நாட்டில் அதிகம் கார்களை விற்பனைச் செய்த நிறுவனங்களின் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கின்றது.
முன்னதாக இந்த இடத்தை ஹூண்டாய் அலங்கரித்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. அதனிடம் இருந்தே இந்த இடத்தை டாடா மோட்டார்ஸ் தற்போது தட்டி பறித்திருக்கின்றது. 2023 நவம்பர் மாதத்தைக் காட்டிலும் விற்பனைச் சற்று லேசாக சரிந்திருந்தாலும், டாடா மோட்டார்ஸ் தற்போது இரண்டாவது பிடித்தைப் பிடித்திருக்கின்றது. எனவேதான் டாடாவின் இந்த வளர்ச்சி ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் மிகப் பெரிய ஆச்சரியமாக அமைந்திருக்கின்றது.
மேலும், இந்த அடி ஹூண்டாய்க்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில், எப்போதும் போல் முதல் இடத்தை மாருதி சுஸுகியே பிடித்திருக்கின்றது. மாருதி சுஸுகி ஒட்டுமொத்தமாக டிசம்பர் 2023இல் 1,04,778 யூனிட்டுகள் வாகனங்களை விற்பனைச் செய்தே இந்த இடத்தை அது பிடித்திருக்கின்றது.
டாடா இரண்டாவது இடத்தைப் பிடிக்க அதன் தயாரிப்புகள் 43,471 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக 42,750 யூனிட்டுகள் விற்பனையுடன் மூன்றாவது இடத்தை ஹூண்டாய் பிடித்திருக்கின்றது. கடந்த 2023 நவம்பர் மாதத்தில் ஹூண்டாய் தயாரிப்புகள் 49,451 யூனிட்டுகள் வரை விற்பனைச் செய்திருந்தது.
இந்த நிலையிலேயே அது 13 சதவீதம் சரிவை 2023 டிசம்பரில் ஹூண்டாய் சந்தித்தது. இதன் விளைவாகவே டாடா மோட்டார்ஸால் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடிந்திருக்கின்றது. அதேவேளையில் டாடாவும் 5.6 சதவீதம் சரிவைச் சென்ற மாதத்தில் சந்தித்து உள்ளது. இருப்பினும், அதனால் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடிந்திருக்கின்றது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் பல அதிக பாதுகாப்பு திறனைப் பெற்றிருப்பதன் விளைவாகவே அதனால் 2023 டிசம்பர் மாத விற்பனையில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடிந்திருக்கின்றது. டாடாவின் பஞ்ச், நெக்ஸான், அல்ட்ராஸ், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்கள் பாதுகாப்பு ரேட்டிங்கில் மிக அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கின்றன.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அவை ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றவை ஆகும். இதுதவிர நிறுவனத்தின் தயாரிப்புகள் பலவும் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றன. உதாரணமாக டாடா பஞ்ச் காரை கூறலாம். இதன் ஆரம்ப விலையே ரூ. 6 லட்சம் மட்டுமே ஆகும்.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த குறைவான விலையிலேயே அதிக பாதுகாப்பு திறனையும், தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் டாடா வழங்கி இருக்கின்றது. இதுதவிர, தன்னுடைய சிஎன்ஜி கார்களை அதிகம் மைலேஜ் தரும் காராகவும், இரட்டை சிலிண்டர் கொண்ட காராகவும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆகையால், மற்ற சிஎன்ஜி கார்களைப் போல் அல்லாமல் இதில் அதிக பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இதன் விளைவாகவும் டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகத் தொடங்கி இருக்கின்றன. இந்த சூழலே அதனை தற்போது இரண்டாவது இடத்தைப் பிடிக்கச் செய்திருக்கின்றது.
அதேவேளையில், ஹூண்டாய் நிறுவனமும் டாடாவிற்கு போட்டி அளிக்கும் நோக்கில் பஞ்ச் கார் மாடலுக்கு போட்டியாக எக்ஸ்ட்ர் மைக்ரோ எஸ்யூவி-யையும், அதிக தொழில்நுட்பம் மற்றும் அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே ஹூண்டாய் எப்போதும் டாடா மோட்டார்ஸுக்கு மிக சிறந்த போட்டியாளனாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இரு நிறுவனங்களுக்கு இடையில் தென்படும் விற்பனை எண்ணிக்கையும் மிகப் பெரிய வித்தியாசம் கொண்டதல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. 721 யூனிட்டுகளே டாடாவின் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளன. இதே நிலை அடுத்து வரும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பாரத் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் டாடா மோட்டார்ஸின் இரண்டு கார் மாடல்கள் (சஃபாரி மற்றும் ஹாரியர்) ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று அசத்தின. பாரத் என்சிஏபி தொடங்கி மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட முதல் தயாரிப்புகளே டாடா மோட்டார்ஸுடையதுதான் என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.