விரைவில் திருமணம் நடக்க காத்திருக்கும் பெண்கள் இன்று அனுமன் ஆலயம் செல்லுங்கள்..!
அனுமன் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அதனால் தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தியாக அனைத்து அனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் வடமாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பங்குனி மாதத்தில் பெளர்ணமிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது.
அனுமனை பூஜிக்கும் முறை
பொதுவாக எந்த ஒரு பூஜை என்றாலும் மாலையில் செய்வதை விட, காலையில் செய்வதே சிறப்பு. அதுவும் மார்கழி மாதத்தில் காலையில் விளக்கேற்றி அனுமனை வழிபடலாம். ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.
எப்படி வழிபட வேண்டும்
வீட்டில் அனுமன் திருவுருவப் படம் இருந்தால் அதை சுத்தம் செய்து, அனுமனின் வால் முழுவதும் பொட்டு வைக்க வேண்டும். அனுமன் படம் இல்லாதவர்கள் ஒரு மனை பலகையில் கோலமிட்டு வீட்டில் ராமாயண புத்தகம் இருந்தால் வைக்கலாம். எதுவும் இல்லை என்றாலும், மனதார அனுமன் நினைத்து வழிபட்டாலே அவர் நமது பூஜையை ஏற்பார். சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் இவற்றில் ஏதாவது ஒன்றை, முடிந்தால் அனைத்தையும் நைவேத்தியமாக படைக்கலாம்.
விரதம் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து இராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் இராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். வசதி இருந்தால் வடை மாலை சாத்தியும், வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வழிபடலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யலாம்.
அனுமன் காயத்ரி:
‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்நோ
ஹனுமன் ப்ரசோதயாத்’
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம்.
பலன்கள்:
அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடை நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.