நிலமோசடி வழக்கு | ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத் துறையினர் விசாரணை: ஜார்க்கண்ட் முழுவதும் தீவிர பாதுகாப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்பதால், முதல்வர் இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அம்மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது
நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதன் தொடர்ச்சியாக, ராஞ்சி இல்லத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஹேமந்த் சோரனிடம் இன்று பகல் 1.30 மணியளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே, திங்கள்கிழமை டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார், சில முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்பதால், முதல்வர் இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. , ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், மனைவி கல்பனாவை முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார் எனப் பரவலாக பேசப்படுகிறது.
இதற்கிடையே, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்த நிதித் துறை செயலாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை ஜார்க்கண்ட் அரசு அமைத்துள்ளது. புதன்கிழமை (இன்று) காலை, ஹேமந்த் சோரன் தனது தந்தை ஷிபு சோரனை விசாரணைக்கு முன்னதாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.