முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு கடைசி வாய்ப்பு.. இன்றும் எச்சரித்த விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜரானார். அப்போது நீதிமன்றம் என்ன சொன்னது என்பதை பார்ப்போம்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ம் தேதி அறிவிக்கப்படும் என விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடுவதை தான் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான எண்ணம், முதன்மை அமர்வு நீதிபதி மனதில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தனது தரப்பு வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில் அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளி வைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிடும் வரை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 06ம் தேதி தீர்ப்பு வழங்குவதை தள்ளி வைக்க அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை. விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்து ராஜேஸ்தாஸ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்மறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா கடந்த ஜனவரி 24ம் தேதி தீர்ப்பளிக்க இருந்தார். ஆனால் ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை.. இதனால் கோபம் அடைந்த விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா ஜனவரி 29ம் தேதி (இன்று) ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி அவரது தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.