லட்டு மாதிரி சான்ஸ்.. நம்பர் 3ல் ஏன் சஞ்சு சாம்சன் களமிறங்க வேண்டும்? இதுமட்டும் நடந்தால் போதும்!
மொஹாலி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் சதம் விளாசி டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள நிலையில், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலி மைதானத்தில் இன்று இரவு நடக்கவுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான மொஹாலி மைதானத்தில் தற்போது அதிகளவிலான பனிப்பொழிவு இருப்பதால், எந்த அணி டாஸ் வென்றாலும் சேஸிங்கை தேர்வு செய்வதே சரியான ஒன்றாக இருக்கும்.
இதனிடையே ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஷான் கிஷன் விலகியதோடு, தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணிக்காக கடினமான நேரத்தில் தனியாளாக போராடி சதம் விளாசியதே அவரின் கம்பேக்கிற்கு காரணமாக அமைந்தது.
8 ஆண்டுகளாக இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க போராடி வரும் சஞ்சு சாம்சன், முதல் சர்வதேச சதத்தை விளாசியதன் மூலமாக டி20 அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. இதனிடையே முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகி இருக்கிறார்.
இதனால் விராட் கோலி களமிறங்கும் 3வது வரிசையில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சுப்மன் கில், சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் நம்பர் 3ல் விளையாடுவதற்கான போட்டியில் உள்ளனர். இதில் சுப்மன் கில் நம்பர் 3ல் விளையாடிய எந்த அனுபவமும் கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நம்பர் 3ல் களமிறங்கி ஒரு இன்னிங்ஸில் கூட சிறப்பாக விளையாடியதில்லை.