எல்பிடபிள்யூல அவுட், கிளீன் போல்டு – கோவத்தின் உச்சத்திற்கு சென்ற பும்ரா – 2 முறை அவுட்டான பென் டக்கெட்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இந்திய முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக 190 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக தொடங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் சேர்த்தனர். கிராவ்லி 31 ரன்கள் சேர்த்த நிலையில், அஸ்வின் பந்தில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆலி போப் களமிறங்கினார்.
டக்கெட் மற்றும் போப் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து ஒரு விக்கெட் இழந்து 89 ரன்கள் குவித்திருந்தது. அதன் பிறகு ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் மாறி மாறி பந்து வீசி விக்கெட் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். பும்ரா வீசிய ஓவரின் கடைசி பந்தானது பென் டக்கெட் காலில் பட்டது.
நடுவரிடம் முறையிட அவர் இல்லை என்றால், பின், டிஆர்எஸ் முறையிட வேண்டும் என்று பும்ரா அறிவுறுத்த, ரோகித் சர்மா விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்திடம் கேட்டார். ஆனால், அதற்கு கேஎஸ் பரத் வேண்டாம் என்று கூறவே, டிஆர் எஸ் செல்லவில்லை. ஆனால், டிவி ரீப்ளேவில் டக்கெட் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தது தெரிந்தது. இதன் காரணமாக பும்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அடுத்து மறுபடியும் பும்ரா பந்து வீச வந்தார். அந்த ஓவரில் டக்கெட் 2 பவுண்டரிகள் விளாசினார். 5ஆவது பந்தை ஆஃப் ஸ்டெம்பை குறி வைத்து வீசினார். டக்கெட் அடித்து விளையாட முயற்சித்து மிஸ் செய்யவே, பந்து ஆஃப் ஸ்டெம்பை தாக்கியது. இதையடுத்து டக்கெட் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா ஆக்ரோஷமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.