குல்தீப் யாதவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.. சுப்மன் கில், ரஜத் பட்டிதருக்கு பாடம் எடுத்த ஸ்பின்னர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், சுப்மன் கில் உள்ளிட்டோரை விடவும் அதிக பந்துகளை எதிர்கொண்டு குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டம் ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் துருவ் ஜுரெல் – குல்தீப் யாதவ் இருவரும் தொடங்கினர். இங்கிலாந்து அணி தரப்பில் பஷீர் மற்றும் ராபின்சன் இருவரும் அட்டாக்கில் வந்தனர்.
இன்றைய நாளின் தொடக்கம் முதலே துர்வ் ஜுரெல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் ரன்கள் சேர்ப்பதில் தீவிரமாக இருந்தனர். அதேபோல் துருவ் ஜுரெல் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்பதால், குல்தீப் யாதவ் அதிகமாக ஸ்ட்ரைக்கை எடுத்து கொண்டார். லைன் மற்றும் லெந்த் மூலம் ராபின்சன் எவ்வளவு அச்சுறுத்தியும் குல்தீப் யாதவின் தடுப்பாட்டத்தை அசைத்து பார்க்க முடியவில்லை.
இதனால் துருவ் ஜுரெல் – குல்தீப் யாதவ் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களை கடந்தது. இதனால் களத்தில் இருந்த இங்கிலாந்து வீரர்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். பஷீர், ஹார்ட்லி, ராபின்சன், ஆண்டர்சன் என்று 4 பவுலர்கள் பவுலிங் செய்தும் இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் குல்தீப் யாதவ் 100 பந்துகளை கடந்து விளையாடி கொண்டிருந்தார்.
இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோரும் 250 ரன்களை கடந்தது. தொடர்ந்து ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த குல்தீப் யாதவை ரவி சாஸ்திரி பாராட்ட தொடங்கினார். அனைத்து பந்துகளை பேட்டின் மூலமாக தடுத்தாடி தான் இந்திய வீரர்கள் பழகி கொண்டிருந்தனர். எப்போதும் கால்களுக்கு முன் பேட் வர வேண்டும் என்பதே அடிப்படை. அதனை குல்தீப் யாதவ் சிறப்பாக செய்கிறார் என்று பாராட்டினார்.
இந்த நிலையில் ஆண்டர்சன் வீசிய பந்தில் இன்சைட் எட்ஜாகி குல்தீப் யாதவ் 131 பந்துகளில் 28 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால் கூட இவ்வளவு பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இதன் மூலமாக இந்த இன்னிங்ஸில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் என்ற பெருமையையும் குல்தீப் யாதவ் பெற்றுள்ளார்.