Rolex சூர்யா-வை விடுங்க.. உண்மையான ரோலக்ஸ் யார் தெரியுமா..?
உலகின் விலை உயர்ந்த, உயர்தரமான வாட்ச்கள் என்றால் அனைவருக்கும் நிச்சயமாக ரோலக்ஸ் பிராண்டு நினைவுக்கு வரும்.
ரோலக்ஸ் பல நூற்றாண்டுகளாக வாட்ச் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது.இந்த சிறந்த பிராண்டை ஹான்ஸ் பில்ஸ்டோர்ப், ஆல்பிரட் டேவிஸ் ஆகியோர் 1905 ஆம் ஆண்டில் உருவாக்கினர். ஜெர்மனியின் குல்ம்பாக்கில் 1881 மார்ச் 22 ஆம் தேதி பிறந்த ஹான்ஸ் வில்ஸ்டோர்பின் தந்தை டேனியல் பெர்டினாண்டு ஒரு ஹார்டுவேர் கடையை வைத்திருந்தார்.
வில்ஸ்டோர்புக்கு 12 வயது இருக்கும்போது அவரது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார் வில்ஸ்டோர்ப்.ஆனால் ஹான்ஸின் சித்தப்பாக்கள் அவருக்கு சிறந்த கல்வியை வழங்கினர்.தனது 19 ஆவது வயதில் ஹான்ஸ் ஸ்விட்சர்லாந்து சென்று தனது படிப்பை முடித்தார்.
பின்னர் அங்கேயே ஒரு முத்து வியாபாரியிடம் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் வாட்ச் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஹான்ஸ் அறிந்து கொண்டார். 1903 ஆம் ஆண்டில் லண்டனுக்கு குடிபெயர்ந்த ஹான்ஸ் புதிய வாழ்க்கையை மேற்கொண்டார்.லட்சக்கணக்கான பணத்தை செலவழித்து அவர் ஒரு சொத்தை வாங்கினார்.
ஆனால் அவரிடம் கொள்ளையடிக்கப்பட்டதால் வேறு வழியின்றி வாட்ச் தயாரிக்கும் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நேரத்தில் ஹான்ஸ் பல சிரமங்களை அனுபவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு திருமணம் முடிந்து தனது மனைவியை சந்தித்த பின்னர் அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஹான்ஸ் மனைவி மூலமாக லண்டனில் இங்கிலாந்து குடியுரிமையை பெற்றார்.அந்த நேரத்தில் அவர் தனத்துவமான ஒரு கைக் கடிகாரத்தை உருவாக்க நினைத்தார். ஆனால் கையில் பணம் இல்லாததால் ஹான்ஸ் தனது மைத்துனர் ஆல்பிரட் டேவிஸுடன் சேர்ந்து ஒரு வாட்ச் கம்பெனியை லண்டனில் தொடங்கினார்.ஆரம்பத்தில் அவர்கள் பாக்கெட் வாட்ச்களைத் தயாரித்தனர். அடுத்த மூன்றாண்டுகளில் அவர்களது பிராண்டு இங்கிலாந்தில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் தங்களது பிராண்டுக்கு ரோலக்ஸ் எனப் பெயரிட்டனர். ரோலக்ஸ் என்ற வார்த்தை உச்சரிப்பதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் எளிதாக இருந்தது.1910 ஆம் ஆண்டில் ரோலக்ஸ் முதல் கைக் கடிகாரத்தை தயாரித்து வாட்ச் ஆப்சர்வேஷன் பியூரோவுக்கு அளித்தது.
இதன்மூலம் ரோலக்ஸ் வாட்ச்சின் துல்லிய தன்மையும் அதிர்வைத் தாங்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கான பரிசோதனையில் வெற்றி பெற்றது.இந்த நிலையில் ஸ்விஸ் குரோனோமீட்டர் சான்றிதழைப் பெற்ற பின் அது வரலாற்றின் முதல் கைக் கடிகாரம் ஆனது. முதலாம் உலகப் போரின்போது ராணுவத்தினர் ரோலக்ஸ் வாட்ச்களை அணியத் தொடங்கினர்.20 ஆம் நூற்றாண்டில் ரோலக்ஸ் பிராண்டு மிகவும் பிரபலம் அடைந்தது. பின்னர் பல சிறப்பான மாடல்களான ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல், சீ டுவெல்லர், சப்மெரைனர், டேட்ஜஸ்ட் போன்ற மாடல்களையும் ரோலக் தயாரித்து விற்றது.