இடதுகை பேட்ஸ்மேன்.. அந்த தகுதி மட்டும் போதாது.. இளம் வீரர்களுக்கு வார்னிங் கொடுத்த ராகுல் டிராவிட்!
இந்தூர்: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற இடதுகை பேட்ஸ்மேனாக மட்டும் இருந்தால் போதாது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக இந்திய டி20 அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகளவில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்விக்கு, இந்திய பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாததும் முக்கிய காரணமாகும்.
ஜடேஜா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்களாக இருந்து வந்தனர். அதிலும் இஷான் கிஷனுக்கு இந்திய பிளேயிங் லெவனில் நிரந்தர வாய்ப்பும் இதுவரை வழங்கப்படவில்லை. இதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே என்று 6 இடதுகை பேட்ஸ்மேன்களை அணிக்குள் கொண்டு வந்தது பிசிசிஐ.
அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எந்த அணியாக இருந்தாலும், எந்த மைதானமாக இருந்தாலும் அட்டாக்கிங் பாணியில் விளையாடி அசத்தி வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.