LEO: உளவு பார்க்க செயற்கைக்கோள் தயாரிக்கும் எலான் மஸ்க்.. அமெரிக்க அரசு, SpaceX உடன் சிறப்பு ஒப்பந்தம்..!!
உலகின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், மக்களின் சுதந்திர பேச்சுக்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் டிவிட்டரை வாங்கியிருந்தாலும், பல அரசு அமைப்புகளுடன் எலான் மஸ்க்-ம் அவருடைய நிறுவனங்களும் பணியாற்றி வருகிறது.
உதாரணமாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நாசா உடன் இணைந்து பல திட்டங்களில் பணியாற்றி வருகிறது, பல அரசு அமைப்புகள் டிவிட்டர், டெஸ்லா, நியூராலிங்க், போரிங் கம்பெனி உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் எலான் மஸ்க் மிகவும் முக்கியமான, ரகசியமான திட்டத்தில் பணியாற்றத் துவங்கியுள்ளார்.
அமெரிக்க அரசின் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 100க்கும் அதிகமான உளவு செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திட்டத்தில் ரகசியமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்லிங்க் சேவைக்காக LEO செயற்கைக்கோள்-களை தயாரித்து வருவது அனைவருக்கும் தெரியும். இத்தகைய செயற்கைக் கோள்களின் முக்கிய பன்பு என்னவென்றால், இது பூமிக்கு மிகவும் அருகில் பறக்கக் கூடியவை. எனவே இதை உளவு செயற்கைக்கோள்களாகவும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி எலான் மஸ்க்-ன் SpaceX நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் சுமார் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை உளவு செயற்கைக்கோள்கள் தயாரிப்பதற்காக அமெரிக்காவின் இன்டலிஜென்ஸ் அமைப்பான National Reconnaissance Office (NRO) உடன் கையெழுத்திட்டு உள்ளது. இந்த உளவு செயற்கைக்கோள்களை NRO அலுவலகம் தான் நிர்வாகம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த திட்டம் வெற்றி அடைந்தால் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு பெரும் பலத்தை சேர்க்க வழிவகை செய்யப்படும், குறிப்பாக தரையில் இருக்கும் பாதுகாப்புப் படைக்கு விண்ணில் இருந்து கூடுதல் தரவுகளை எளிதாக பகிர முடியும். எலான் மஸ்க்-ன் LEO செயற்கைக்கோள்கள் பெரும் மாற்றத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறையில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய உளவுத்துறை அலுவலகமானது, உலகம் இதுவரை கண்டிராத, மிகவும் திறமையான, மாறுபட்ட மற்றும் நெகிழ்ச்சியான விண்வெளி அடிப்படையிலான உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு அமைப்புகளை உருவாக்கி வருகிறது என NRO செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த செயற்கைக்கோள்கள் தரையில் உள்ள இலக்குகளைக் கண்காணித்து அந்த தரவுகளை அமெரிக்க உளவுத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்று தெரிகிறது. ஆனால் அரசு வட்டாரத்தில் இதை Starshield contract என கூறப்பட்டாலும், எலான் மஸ்க் பெயரோ, அல்லது SpaceX பெயரோ வெளியில் வரவில்லை.