நெகிழ்ச்சி… தாயை நடுத்தெருவில் விட்டு சென்ற மகள்… அடைக்கலம் கொடுத்த பொதுமக்கள்.. !
கர்நாடகா மாநிலம் ஈகள்ளஹள்ளி கிராமத்தில் சர்ஜபுரா சாலை ஓரத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் மூதாட்டியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டனர். பசிமயக்கம் என்பதை அறிந்தவர்கள் அவருக்குத் தண்ணீரும், உணவும் வாங்கிக் கொடுத்தனர். அவர் சீரானதும் அவரிடம் விசாரித்தனர். அந்த மூதாட்டி “எனது பெயர் ஒபோவா எனக்கு வயது 80.
பொம்மசந்திரா பகுதியில் வசித்து வரும் மகள் ஆஷா ராணியுடன் வசித்து வந்தேன். மகளும், மருமகன் மஞ்சுந்தாத்தும் தன்னை தினமும் அடித்துத் துன்புறுத்தினர். அத்துடன் நேற்று இரவு தன்னை காரில் ஏற்றி வந்தது சாலை ஓரம் தள்ளிவிட்டுவிட்டு சென்றனர்.
ஏற்கனவே காலில் நல்ல அடி. இதனால் வேறெங்கும் செல்ல முடியாமல் இரவு முழுவதும்கடும் குளிரில் தவித்தேன் ” என கூறி கதறி அழுதார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆட்டோ மூலம் அருகே உள்ள ஆசிரமம் ஒன்றில் சேர்த்தனர்.
மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு ஆசிரமத்திலேயே தங்க இடமும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர். சாலையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்ததில் இரவு காரில் இருந்து மூதாட்டிய இறக்கிவிடப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
கார் நம்பர் சரியாக பதிவாகவில்லை. மூதாட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது மகள் மற்றும் மருமகனையும் தேடி வருகின்றனர்.