பாமாயிலை விடுங்க.. பருப்பும் க்ளோஸ்.. ரேஷனில் அதிரடி.. உடனே கிளம்பி வந்த தலைவர்.. தமிழக அரசு முடிவு?
சென்னை: ரேஷனில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும், இருக்கின்ற சலுகைகளை பறிப்பது என்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாடியிருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ துவரம் பருப்பு, ரூ. 30க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ. 30க்கும், பாமாயில் ரூ. 25க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாமாயில்: இந்நிலையில் 2008ம் ஆண்டு உளுத்தம் பருப்பு வினியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது கனடா மஞ்சள் பருப்பு அல்லது துவரம் பருப்பை தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறது..
இப்போது, தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க மாதம் 20000 டன் துவரம் பருப்பு, 2 கோடி லிட்டர் பாமாயில் தேவைப்படுகிறது. அது டெண்டர் கோரி தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், பருப்பு கொள்முதலில், விலை ஏற்ற, இறக்கம் பிரச்னையாக இருப்பதுடன் அரசும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதனால் பருப்பு பாமாயிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்க நிதித்துறை தாமதித்து வருகிறது.
எனவே நிதி நெருக்கடி காரணமாக பருப்பு, பாமாயில் வழங்கும் சிறப்பு பொது வினியோக திட்டத்தை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு பதிலாக, அதில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்று, அதிகாரிகளும் பணியாளர்களும் யோசனை தெரிவித்துள்ளனர்.
மின் கட்டணம்: ஓபிஎஸ் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை இதுதான்: “மின் கட்டணத்தை குறைப்போம் என்று சொல்லி மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய ஆட்சி திமுக ஆட்சி. பொருளாதாரம் உயரும் வரை சொத்து வரியை உயர்த்தமாட்டேன் என்று சொல்லிவிட்டு அதனை இரு மடங்கு உயர்த்திய ஆட்சி திமுக ஆட்சி. வழிகாட்டி மதிப்பு நியாயமாக நிர்ணயிக்கப்படும் என்று கூறி, அதனை உயர்த்திய ஆட்சி திமுக ஆட்சி.
இந்த வரிசையில், கூடுதலாக ஒரு கிலோ உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் பொருட்களை நிறுத்தும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மொத்தத்தில், கடந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சி, இருக்கின்ற சலுகைகளை பறிக்கின்ற ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
பாமாயில்: நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூடுதலாக உளுத்தம் பருப்பும், சர்க்கரையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு காலம் கடந்தும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
மாறாக, துவரம் பருப்புக்கு பதிலாக மஞ்சள் பருப்பு வழங்குவதும் மற்றும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முறையாக வழங்கப்படாத சூழ்நிலையும் நிலவி வந்தது. தற்போது,, இதனையும் நிறுத்தப் போவதாக செய்தி வந்துள்ளது. இதற்குக் காரணம் கடும் நிதி நெருக்கடி என்று கூறப்படுகிறது.