டிவிஎஸ் எக்ஸ்எல் மாதிரி அடிச்சி ஓட்டலாம்! ஓலா உருவாக்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்… இப்படித்தான் இருக்கும்
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான படமும், விபரங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றின் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் வேகமாக வளர்ச்சிக் கண்டுவரும் நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் உள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனத்துக்கு ஓசூரில் தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் நன்றாக பயன்படுத்தி வருகிறது.
அதேபோல், கமர்ஷியல் பிரிவிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தேவை அதிகரித்து வருவதால், அதனையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இறங்கவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தான் உருவாக்கியுள்ள கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைனுக்கான காப்புரிமையை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மத்திய அரசாங்கத்திடம் தாக்கல் செய்துள்ளது.
இந்த காப்புரிமையை ஓலா நிறுவனம் பதிவு செய்து கிட்டத்தட்ட 1 வருடமாகி விட்டது. ஆனால், தற்போதுதான் இதுகுறித்த விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள படத்தில், அதிகளவில் பாடி பேனல்கள் இல்லாமல், கிட்டத்தட்ட சைக்கிள் போன்று இருக்கும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காணலாம்.
சிம்பிளான குழாய் சேசிஸில் உருவாக்கப்பட்டதாக, மிகவும் சிறிய அளவில் இந்த ஸ்கூட்டரை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கும். ஏனெனில் அப்போதுதான், உற்பத்தி செலவு குறைவாக இருக்கும். ஹேண்டில்பாரும் சிறிய அளவில் உள்ளது. அதேபோன்று, விற்பனையில் இருக்கும் ஓலா எஸ்1 ஸ்கூட்டர்கள் அளவிற்கு இந்த கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தொழிற்நுட்ப வசதிகளை எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும் இந்த படத்தில், ஸ்கூட்டரின் ஹேண்டில்பாருக்கு நடுவில் சிறிய அளவில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இருப்பதை காண முடிகிறது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் டிஜிட்டல் தரத்தில் வழங்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்சிடி தரத்தில்தான் இருக்கும். சஸ்பென்ஷனுக்கு இந்த ஸ்கூட்டரில் ட்வின் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்கத்தில் இருப்பது போன்று தெரிகிறது.
ஆனால், சிங்கிள் ஃபோர்க் செட்-அப் ஆக இது வழங்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏனெனில், தற்போதைய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் சிங்கிள் ஃபோர்க் சஸ்பென்ஷன் தான் கொடுக்கப்படுகிறது. இருக்கைக்கு அடியில் நிறைய இடவசதியை கொண்டுவரும் முயற்சியாக, தனது எஸ்1 ஸ்கூட்டர்களில் பேட்டரியை ஓட்டுனர் கால் வைக்கும் ஃப்ளோர்போர்டுக்கு கீழே ஓலா நிறுவனம் வழங்கி வருகிறது. ஆனால், இந்த கமர்ஷியல் ஸ்கூட்டரில் நேர்மாறாக பேட்டரியை ஓலா வழங்கலாம்.
கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழக்கமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்றவை கிடையாது. எப்போதும் சுமைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வலிமையானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்க வேண்டும். கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை ஒப்பந்தம் ஆனது பொதுவாக இரு நிறுவனங்களுக்கு இடையே மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, ஓலா நிறுவனம் நேரடியாக வாடிக்கையாளர்களை அணுக வேண்டிய தேவை இருக்காது.