ஒரு சினிமா படம் முடியறதுக்குள்ள சென்னை டூ பெங்களூர் போயிடலாம்!! மத்திய அரசு உருவாக்கும் தரமான எக்ஸ்பிரஸ் சாலை!
மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் சென்னை – பெங்களூர் விரைவுச்சாலை பணிகள் இந்த 2024ஆம் ஆண்டிற்குள் நிறைவு பெற்றுவிடுமா என்கிற கேள்விக்கு மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். இதுகுறித்த அவரது சமீபத்திய அறிக்கையை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் முக்கிய இரு மாநகரங்களாக சென்னை மற்றும் பெங்களூரை சொல்லலாம். இந்தியாவின் தொழில்துறைக்கு தலைநகரமாக நமது சென்னையும், மென்பொருளுக்கு தலைநகரமாக கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரும் விளங்குகின்றன. இதன் காரணமாகவே இந்த இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து இந்திய அளவில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, சென்னை மற்றும் பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ்வே எனப்படும் விரைவுச்சாலையை அமைக்கும் பணியில் கடந்த பல மாதங்களாக மத்திய நெடுஞ்சாலை துறை ஈடுப்பட்டு வருகிறது. ஆனால், இன்னமும் இந்த பணிகள் முடிந்தப்பாடில்லை. இந்த நிலையில், சென்னை – பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே பணிகள் இந்த 2024 டிசம்பர் மாதத்திற்கு உள்ளாக நிறைவு பெற்றுவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்ற மக்களவையில் பேசுகையில், இந்த பசுமையான விரைவுச்சாலை பணிகளை விரைவாக முடிக்க தமிழ்நாடு மாநில அரசாங்கத்துடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும், வாகன ஓட்டிகள் இந்த வருட டிசம்பர் மாதத்தில் இருந்து சென்னை – பெங்களூர் விரைவுச்சாலையை பயன்படுத்தலாம் என நம்புவதாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“டிசம்பருக்குள் நெடுஞ்சாலையை நிறைவு செய்ய நாங்கள் எங்களது சிறந்த நிலையில் முயற்சித்து வருவதால், அமைச்சகத்துக்கு நான் தைரியத்தை கொடுக்கிறேன்…” என பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த கூட்ட தொடரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். சென்னை- பெங்களூர் இடையேயான விரைவுச்சாலை ஆனது மொத்தம் 8 பாதைகளை கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த இரு நகரங்களுக்கு இடையேயான பயண தொலைவை முடிந்தவரையில் குறுகியதாக கொண்டுவர மத்திய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய விரைவுச்சாலையில் இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவு 262கிமீ ஆக இருக்கலாம். அதுவே தற்சமயம், ஏறக்குறைய 300கிமீ ஆக உள்ளது. அதேபோல், இந்த புதிய விரைவுச்சாலையில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் பயணிப்பதற்கு வாகன ஓட்டிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
ஆதலால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு சாலை வழியாக வெறும் 2 – 3 மணிநேரங்களில் சென்றடைந்துவிடலாம் என்பது அமைச்சர் நிதின் கட்கரியின் கணிப்பாக உள்ளது. சுமார் ரூ.16,730 கோடி மதிப்பீட்டில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் இருந்து பெங்களூரின் ஹோஸ்கோட் வரையிலான இந்த விரைவுச்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை 7 அல்லது NE7 என பெயர் சூட்டப்படலாம்.