ஒரு படம் முடியறதுக்குள்ள பெங்களூருக்கு போய்டலாம்!! சென்னையில் ஓட போகும் புல்லட் இரயில்கள்!
சென்னை – மைசூர் இடையே அதிவிரைவு இரயில் சேவை வர உள்ளது என சொன்னால் நம்ப முடிகிறதா? அட உண்மைதாங்க. ஆனால், அதற்குள் இன்னும் சில ஆண்டுகள் உருண்டோடிவிடும். சென்னை – மைசூர் இடையே இத்தகைய இரயில் வர உள்ளது என எதை ஆதாரமாக வைத்து கூறுகிறோம்? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களாக சென்னை மற்றும் பெங்களூரை சொல்லலாம். பெங்களூருக்கு அருகே அமைந்துள்ள மைசூரும் கர்நாடகா மாநிலத்தில் கலாச்சார நகரமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் எந்த திட்டங்களை கொண்டுவருவதாக இருந்தாலும், முடிந்த வரையில் இந்த 3 நகரங்களை இணைக்கும் விதத்தில் கொண்டு வருகின்றனர்.
வந்தே பாரத் இரயில் கூட பெங்களூர் வழியாக சென்னையையும், மைசூரையும் இணைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டது. இப்போதும், தினந்தோறும் வந்தே இரயில்கள் சென்னை – மைசூர் இடையே இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் இரயில்கள் அவற்றின் அதிவிரைவான பயணத்தால் சேவைக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், சென்னை, மைசூர் இடையே வந்தே பாரத் இரயிலை காட்டிலும் அதிவிரைவான இரயில் சேவை வர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த திட்டத்திற்கு சென்னை-பெங்களூர்-மைசூர் ஹை-ஸ்பீடு இரயில் (HSR) திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் மிகவும் ஆரம்ப-கட்ட நிலையில்தான் உள்ளது எனவும், தற்போதைக்கு இதற்கான இடம் பார்க்கும் பணிகள் மட்டுமே துவங்கப்பட்டு உள்ளது எனவும் ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் கூறியிருந்தோம். இந்த நிலையில், இந்த அதிவிரைவு இரயில் திட்டத்தில் சென்னை மற்றும் மைசூருக்கு இடையே மொத்தம் 9 இரயில் நிலையங்கள் வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர் (ஆந்திரா), பங்காராபேட் (கர்நாடகா), பெங்களூர், சன்னாபட்னா, மண்டியா மற்றும் மைசூர் என்பன அந்த 9 இரயில் நிலையங்கள் என தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. இரயில் நிலையங்களின் பெயர்கள் இறுதிச் செய்யப்பட்டுள்ளதால், இரயில் வழித்தடம் குறித்து திட்டம் வகுக்கும் பணிகள் எச்.எஸ்.ஆர் திட்டத்தில் துவங்கி இருப்பதை அறிய முடிகிறது.
திட்டத்திற்கு இடத்தை வழங்குபவர்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனையை நடத்தியுள்ளதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இரயில் நிலையங்கள் எங்கு அமையவுள்ளன என்பதும், பயண கட்டணங்கள் குறித்த விபரங்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் திட்ட விவர குறிப்பு (DPR) வெளிவந்த பின் தெரிந்துவிடும்.
இந்த அதிவிரைவு இரயிலுக்கான தண்டவாளங்கள் பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ்வே-ஐ ஒட்டியவாறு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, சென்னைக்கு அருகே பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தையும் இந்த அதிவிரைவு இரயில்கள் இணைக்கும் விதத்தில் இயக்கப்படும் என கூறப்படுகிறது. சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே-க்கு வெறும் 3 கிமீ தொலைவில் புதிய பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிவிரைவு இரயில் திட்டத்தில், புல்லட் இரயில்கள் பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து பெங்களூரை தற்சமயம் வந்தே பாரத் இரயில்கள் 4 மணிநேரம் 30 நிமிடங்களில் எட்டிவிடுகின்றன. புல்லட் இரயில்கள் இன்னும் விரைவாக 2 மணிநேரம் 30 நிமிடங்களில் அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 750 இருக்கைகளுடன், சராசரியாக மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் இந்த புல்லட் இரயில்கள் இருக்கும் என கூறப்படுகிறது.