தமிழர்களின் வாழ்வுரிமை காக்க அரணாக நிற்போம்! வேல்முருகன் தமிழர் திருநாள் விழா உறுதிமொழி!
சென்னை: தமிழர்களின் வாழ்வுரிமை காக்க என்றும் அரணாக நிற்போம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு;
பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழறிஞர்களாலும், அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும், தமிழர் திருநாள் என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, உலகெங்கும் நிறைந்திருக்கும் தமிழர்கள் இன்று கொண்டாடி வருகிறோம்.
உழவுத் தொழில் வேறு தொழில் செய்பவர்களுக்கெல்லாம் உணவளித்துத் தாங்குவதால், உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள். அப்படிப்பட்ட உழவர்கள் தங்கள் உழைப்பின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் நாள் பொங்கல் திருநாள்.
இந்துவாக, இசுலாமியராக, கிறித்தவர் என்ற வேறுபாடின்றி, ஒரே இனம்; அது தமிழினம் என்ற அடிப்படையில், தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு இருக்கிறோம்.
ஆரியர் எதிர்ப்பு சங்க காலத்திலிருந்து தமிழ் இனத்தில் இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், திருவள்ளுவர், திருமூலம், வள்ளலார் வழியில் நின்று, பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா சக்திகளுக்கு பாடம் புகட்டுவோம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த நம்பிக்கைக்குரிய அரிய பொன் மொழியாகும். அதன்படி, தை வந்தால் நமக்கு ஒரு பொன்னான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு செயலாற்றுவோம்.