“முதல்வரை இரவில் சந்திக்க வைத்தது, பிரதமரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது!’ – வைகோ காட்டம்
திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2015-ல் சென்னையில் மழை, வெள்ளம் தாக்கிய போது அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆனால், இம்முறை பேய் மழை பெய்த போதும், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு தக்க நடவடிக்கைகள் எடுத்ததால் சென்னையில் பெருமளவு பாதிப்புகள் குறைந்துள்ளது. அதேபோல், இரண்டாவது முறையாக தென் மாவட்டங்களை மழை, வெள்ளம் தாக்கியதில் ஏராளமான குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் நிற்கின்றனர். இதனை சரி செய்வதற்காக மாநில அரசுக்குள்ள சக்திகளை எல்லாம் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், மத்திய அரசு கேட்ட நிதியை கொடுக்கவில்லை.
அதேநேரம், பாஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் அவர்களின் தேவைக்கு அதிகமாகவே நிதியை தருகிறார்கள். ஒரு கண்ணில் வெண்ணையையும், மறுகண்ணாக உள்ள பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் சுண்ணாம்பையும் வைப்பது போல செயல்படுகிறார்கள்.
பிரதமரை போற போக்கில் முதலமைச்சர் பார்த்து செல்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் நம்முடைய முதலமைச்சரை பார்த்துச் சொல்லி இருக்கிறார். போற போக்கில் பார்க்க பிரதமர் என்ன வழிப்போக்கரா?. மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும் போது நிவாரணத்திற்காக பிரதமரை சந்திக்க சென்ற தமிழக முதல்வரின் நேரத்தை மாற்றி இரவு சந்திக்கலாம் என்று சொல்வது, பிரதமரின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் சுமூகமாகவே நடந்தது. தமிழக அரசு மக்களுடைய கஷ்ட நஷ்டங்களை போக்குவதற்கான முயற்சிகளில் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறது. மின்சாரம் பழுதுபட்ட பல இடங்களில் எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது. தென் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு என்பதால், தமிழக அரசு திட்டமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. இதன்மூலம், மத்திய மோடி அரசு ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.