LIC-யின் சூப்பரான திட்டம்.. ஒருமுறை முதலீடு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்..!
நீங்கள் ஒருமுறை செய்யும் முதலீடு வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வருமானம் கொடுத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு திட்டத்தை தான் எல்ஐசி வழங்குகிறது. அந்த திட்டம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எல்ஐசி சாரல் ஓய்வூதிய திட்டம்: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்ஐசி சாரல் ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு முறை மட்டுமே ப்ரீமியம் செலுத்தக்கூடிய ஒரு திட்டமாகும். திட்டத்தை எடுக்கும் போது பாலிசிதாரர் ப்ரீமியம் செலுத்தினால் மட்டுமே போதும். இதன் பின் பாலிசிதாரருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.
எல்ஐசியின் சாரல் ஓய்வூதிய திட்டம் உடனடி வருடாந்திர திட்டமாகும். அதாவது பாலிசி எடுத்தவுடனே பென்ஷன் தொடங்கும். ஓய்வூதியம் பெறுபவர் ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை என ஓய்வூதியம் பெறலாம். எந்த விருப்பத்தை தேர்வு செய்தாலும், ஓய்வூதியம் அதே வழியில் தொடங்கும்.
40 வயது முதல் இணையலாம்: இந்த திட்டத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் வாங்கலாம். இதில் குறைந்தபட்ச வருடாந்திர ஓய்வூதிய தொகை ஆண்டுக்கு ரூ.12,000 ஆகும். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. எல்ஐசி சாரல் ஓய்வூதிய திட்டத்தில் 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் இணையலாம்.
சிங்கிள் மற்றும் ஜாயிண்ட் லைப் என இரண்டு முறைகளில் இந்த பாலிசியை எடுக்கலாம். சிங்கிள் லைப் முறையில் ,பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியத்தை பெற முடியும். ஒரு வேளை விபத்து மரணமோ அல்லது இயற்கை மரணமோ ஏற்பட்டால் நாமினிக்கு ப்ரீமியம் தொகையானது செலுத்தப்படும்.
பாலிசி எடுக்கும் அடுத்த நாளில் இருந்து ஓய்வூதியம்: இந்த பாலிசியில் ஒருவர் 10 லட்சம் ரூபாயை ப்ரீமியமாக செலுத்தி இருந்தால் ஆண்டுக்கு 50,250 ரூபாய் ஓய்வூதியம் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். நாம் செலுத்தும் ப்ரீமியம் தொகைக்கு ஏற்ப ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு வேளை பாலிசியை முன் கூட்டியே சரண்டர் செய்தால், 5 சதவிகிதம் கழிக்கப்பட்டு டெபாசிட் தொகை வழங்கப்படும். அதுமட்டுமல்ல பாலிசி எடுத்த பின்பு அதில் இருந்து கடன் கூட வாங்கி கொள்ளலாம். பாலிசி தொடங்கிய 6 மாத காலத்திற்கு பிறகு கடன் வசதி கிடைக்கும்.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 ஓய்வூதியம் கிடைக்க , ஒரு முறை ப்ரீமியமாக 2.5 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும். அதே போல ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயை ஓய்வூதியமாக பெற 20 லட்சம் ரூபாயை ப்ரீமியமாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம் கிடைக்கும் என்பதால் முதிர்வு காலம் என ஒன்று இல்லை.