படுதோல்வியை சந்தித்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலைக்கோட்டை வாலிபன்
2010 ல் நாயகன் மலையாளப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இந்திரஜித், திலகன் நடித்த அப்படம் சுமாராகவே போனது. அதையடுத்து இயக்கிய சிட்டி ஆஃப் காட், யார் இவர் என்று திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்து 2013 இல் ஆமென் படத்தை இயக்கினார். இந்திரஜித், கலாபவன் மணி, சுவாதி பிரதான வேடங்களில் நடித்த இந்த பேன்டஸி திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும், காட்சிகளை படமாக்கியவிதமும் ஆமெனை மலையாளத்தின் முக்கிய திரைப்படமாக மாற்றியது. பெல்லிசேரியின் சிறந்த படமாக ஆமென் படத்தை குறிப்பிடுகிறவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.
ஆமென் வெற்றிக்குப் பிறகு பிளாக் க்யூமர் ஜானரில் டபுள் பேரல் படத்தை இயக்கினார். அது சரியாக அமையாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அதன் பிறகு 2017 இல் தனது மாஸ்டர் பீஸ் அங்கமாலி டைரிஸை இயக்கினார். அது கேரளா தாண்டி அவரை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்தது. அடுத்து இயக்கிய இ.ம.யோ., ஜல்லிக்கட்டு படங்கள் பெல்லிசேரியின் படம் என்றால் வித்தியாசமாக, புதியதொரு அனுபவத்தைத் தரும் படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தது.
கடைசியாக வெளிவந்த சுருளி, நண்பகல் நேரத்து மயக்கம் படங்கள் பரிசோதனை முயற்சி என்ற அளவில் ரசிகர்களை திருப்தி செய்தன. இந்தப் பின்னணியில், அவர் மெகா பட்ஜெட்டில் மோகன்லாலை வைத்து மலைக்கோட்டை வாலிபன் படத்தை இயக்குகிறார் என்றதும் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், படத்தின் ட்ரெய்லர் பெரும்பாலானவர்களை கவரவில்லை. படத்தில் இடம்பெற்ற நிலப்பரப்பு, அதன் கதை மாந்தர்கள், அவர்களின் உடைகள் என அனைத்தும் அந்நியத்தன்மையுடன் ஒரு விலக்கத்தை உருவாக்கின.
படம் வெளியான ஜனவரி 25 ஆம் தேதி கேரளாவில் சுமார் 5.6 கோடிகளை படம் வசூலித்தது. முதல் நாள் முதல் ஷோ முடிந்த நிலையில், படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் மழையாக பொழிய ஆரம்பித்தன. இரண்டாவது நாள் குடியரசுதினம், விடுமுறையாக இருந்தும் படத்தின் வசூல் பாதாளத்துக்கு சென்றது. இரண்டாவது நாளில் 2.4 கோடிகளை மட்டுமே படம் வசூலித்தது. மூன்றாவது நாளில் இது 1.5 கோடிகளாக கீழிறங்கியது. முதல்வார முடிவில் (7 நாள்களில்) படம் சுமார் 12.5 கோடிகள் வசூலித்து தடுமாறி நிற்கிறது.
படத்தின் எதிர்மறை விமர்சனம் குறித்து பேசிய பெல்லிசேரி, “மலைக்கோட்டை வாலிபன் போன்ற ஒரு முயற்சியை கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை. படம் வெளியான இரண்டாவது நாளிலேயே விமர்சனங்கள் திசைமாறிவிட்டன. எனக்குப் படம் பிடிக்கவில்லை, அதனால், யாரும் படத்தைப் பார்க்க வேண்டாம் என்றரீதியில் விமர்சனங்கள் இருந்தன. இதனால், ஒன்றரை வருடங்கள் இத்தனை பேர் போட்ட கடின உழைப்பு காணாமல் போய், மோசமான படம் என்ற விமர்சனம் மட்டுமே எஞ்சியது. படம் உங்கக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். மற்றவர்களை பார்க்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்தாதீர்கள். படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் விளங்கிக் கொள்ளும் அளவுக்கு விரிவான ஒரு ட்ரெய்லரை நான் வெளியிட்டிருக்க வேண்டும்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
எத்தனை காரணங்கள் கூறினாலும், தோல்வி தோல்விதான். அதனை எத்தனை கருத்துக்கள் போட்டும் நேர் செய்ய முடியாது. அடுத்தப் படத்தில் பெல்லிசேரி தான் யார் என்பதை மறுபடி நிரூபிப்பார்… அதில் யாருக்கும் சந்தேகமில்லை.