குட்டி 16 அடி பாயும்.. ஆகாஷ் அம்பானி கொடுத்த பாரத்ஜிபிடி அப்டேட்.. போட்டி சாட்ஜிபிடிதான்!
21ஆம் நூற்றாண்டில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஜியோ (Jio) நிறுவனம், பாரத் ஜிபிடி (BharatGPT) என்னும் பெயரில் இந்தியா மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது.
ஐஐடி பாம்பேவுடன் (IIT Bombay) கைக்கோர்த்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.
இந்திய மக்களிடம், ஒரு தொழில்நுட்பத்தை எளிதாக ஏற்று கொள்ளும் மனப்பான்மை இயல்பாகவே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதனாலேயே யுபிஐ (UPI), 4ஜி (4G) போன்றவற்றை அதிவிரைவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துவருகிறது.
இந்த சூழலிலேயே ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாட்பாட் இதுவரையில் செயற்கை நுண்ணறிவு எட்டாத உயரத்துக்கு அதை கொண்டு சேர்த்தது என்றே சொல்ல வேண்டும். கணினி, அறிவியல், கணிதம், கலை சார்ந்த எந்த கேள்வியை கேட்டாலும், அதி நுணுக்கமான பதில்களை அதுகொடுக்கிறது.
சொல்லப்போனால், பள்ளி மாணவர்களின் வீட்டுப்பாடங்கள் முதல் ஆய்வு மாணவர்களின் கட்டுரைகள் வரையில், சாட்ஜிபிடியை வைத்து செய்துகொள்ள முடிகிறது. இந்த தொழில்நுட்பம் மக்களிடையே அதிவேக பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்ததால், மற்ற டெக் ஜாம்பவான்களின் கவனமும் இதில் திரும்பியது.
கூகுள் நிறுவனம் பார்ட் (Bard) என்னும் செயற்கை நுண்ணறிவு சாட்பாடை களமிறக்கியது. அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்ங் ஏஐ (Bing AI) என்னும் சாட்பாடை கொண்டுவந்தது. இந்த சாட்பாட்களின் அப்டேட் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. எதிர்காலத்தில், ஒரு விர்ச்சுவல் அசிஸ்டன்ட் போல செயல்படும் நோக்கில் இவற்றின் வளர்ச்சி இருக்கிறது.
இப்படிபட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial Intelligence Technology) இந்திய நாட்டில் 44 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஜியோ நிறுவனம், விட்டு வைக்கவா போகிறது. சாட்ஜிபிடிக்கு போட்டியாக பாரத் ஜிபிடி என்னும் செயற்கை நுண்ணறிவு சாட்பாடை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் (Reliance Jio Infocomm Limited) நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி அதை உறுதி செய்துள்ளார். நேற்று முன்தினம் பாம்பே ஐஐடி வளாகத்தில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழாவான டெக்ஃபெஸ்ட் (Techfest) தொடங்கியது. இதில், ஆகாஷ் அம்பானியும் கலந்துகொண்டார்.
அப்போது, ஜியோ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முன்னெடுப்புகள் குறித்து அறிவித்தார். அதில், ஜியோ பாரத்ஜிபிடியை பாம்பே ஐடிடியுடன் இணைந்து உருவாக்கிவருவதாக தெரிவித்தார். அதோடு பாரத் ஜிபிடி மிகப்பெரும் மொழி சார்ந்த தொழில்நுட்பமாக இருக்கும் என்பதை உறுதி செய்தார். ஜியோ 2.0 (Jio 2.0) திட்டங்களின் கீழ் 2014ஆம் ஆண்டு முதலே இந்த திட்டம் இருப்பதாகவும் விளக்கினார்.
இந்த பாரத்ஜிபிடியின் அறிமுகம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ஒருசில ஆண்டுகளில் வெளியிடப்படலாம். இது ஆப் மூலம் வெளியிடப்பட அதிக வாய்ப்புள்ளது. ஜியோ நிறுவனம் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கிறது. ஆகவே, வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவிலும், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.
இந்த நிகழ்வில் ஆகாஷ் அம்பானி மற்றொரு பிரம்மாண்ட திட்டத்தையும் வெளிப்படுத்தினார். டிவி ஓஎஸ் உருவாக்கத்திலும் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுவருவதாக குறிப்பிட்டார். இப்போது, நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் டிவிகளில் ஆண்ட்ராய்டு அல்லது கூகுள் டிவி ஓஎஸ் மட்டுமே வருகின்றன. ஆகவே, ஜியோ நிறுவனம் புதிய ஓஎஸ் கொண்டுவந்தால், டிவி நிறுவனங்களோடு கைகோர்க்கும் அல்லது டிவி உற்பத்தியில் ஈடுபடும்.