தெய்வமாக வணங்கப்படும் பல்லிகள்.. எந்த கோயிலில் தெரியுமா?

பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் புராணங்கள் கூறுகின்றன. பல சிறப்புக்கள் மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும் என வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்பீர்கள். சில இடங்களில் கத்தினாள் தீயவை நடக்கும் என்று கூறுவதும் உண்டு. அப்படி என்ன இந்த பல்லிக்கும் நமக்கும் சம்பந்தம் புராணங்கள் கூறுவது என்ன? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
பல்லி நம் உடல் மீது எங்கு விழுகிறதோ அதை பொருத்தும், அது எழுப்பும் ஓசையை பொருத்தும் தனித் தனி பலன்கள் உண்டு. பண்டைய காலத்தில் பல்லியை குறித்து ஒரு தனி படிப்பே இருந்தது என்றால் நம்புவீர்களா? அதுதான் கௌளி சாஸ்திரம். பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில் கர்பகிரகத்தின் மேல் கூரையில் தங்கம் மற்றும் வெள்ளியில் பல்லி உருவங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.
பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என பழைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. உங்கள் உடலின் எந்த ஒரு பகுதியிலும் பல்லி விழுந்தாலும், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நன்கு குளித்து விட்டு சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற எந்த ஒரு கோவிலுக்கும் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.
அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்களின் வீட்டின் பூஜையறையிலேயே தெய்வங்களின் படத்திற்கு முன்பாக திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் நல்லது. சிவபெருமானுக்குரிய மிரியுந்தன்ஜெய மந்திரத்தை சொன்னாலும் பல்லி விழுந்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
சித்த வைத்தியத்தில் மருந்தாகவும், கோயில் சடங்குகளில் அபிஷேக பொருளாகவும் பசு மாட்டிலிருந்து பெறப்படும் 5 விதமான பொருட்களால் செய்யப்படும் பஞ்சகவ்யா திகழ்கிறது. அந்த பஞ்சகவ்யாவை உண்பதால் பல்லி நம்மீது விழுந்ததால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பதும் நம்பிக்கை.
வசதி படைத்தவர்கள் கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு தங்கம் அல்லது தங்க ஆபரணங்களையோ தானமாக அளிப்பதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். அத்துடன் கோயில்களில் விளக்கெண்ணெய் கொண்டு விளக்குகள் ஏற்றுவதாலும் பல்லி விழுந்ததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
இதைவிட சிறந்த பரிகாரமாக இருப்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கின்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவம். மேலும் அந்த பல்லி உருவத்தோடு சூரியன் மற்றும் சந்திரனின் சித்திரத்தையும் காண முடியும். தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லி உருவத்தை தொடுவதால் நம் மீதுள்ள ராகு – கேது, சனி போன்ற கிரகங்களின் தீய தாக்கங்கள் மற்றும் வருங்காலத்தில் வரப்போகும் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.