மக்களவைத் தேர்தல் 2024: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வேட்புமனுத் தாக்கல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் வருகிற 27ஆம் தேதியாகும். இந்த நிலையில், நேற்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால், தமிழகத்தின் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சின்னத்தில் போட்டியிடும் 33 வேட்பாளர்களும் இன்று பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அக்கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, நேற்றைய தினம் திமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். ஆனால், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் தூத்துக்குடியில் தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டதால் கனிமொழியால் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்ய இயலவில்லை என தெரிகிறது.
எனவே, கனிமொழி தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.