மக்களவைத் தேர்தல் 2024: ராதிகா சரத்குமார் சொத்து மதிப்பு என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் வருகிற 27ஆம் தேதியாகும். இந்த நிலையில், நேற்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால், தமிழகத்தின் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் சுமார் 400க்கும் மேற்படோர் மாநிலம் முழுவதும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ள தங்களது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு குறித்து அவரது வேட்புமனுவில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்படி, ரூ.27 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.26 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் என மொத்தம் ரூ.53 கோடி கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக ராதிகா சரத்குமார் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அவரது கணவர் சரத்குமாருக்கு ரூ.8 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.21 கோடி மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வருமான வரி நிலுவை ரூ.3.9 கோடி, ஜிஎஸ்டி வரி நிலுவை ரூ.2.6 கோடி ஆகியவை அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையாக உள்ளது என ராதிகா சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கு ரூ.14 கோடி கடன் இருப்பதாகவும் அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், நடிகர் சரத்குமார் அரசுகு செலுத்த வேண்டிய நிலுவை தொகையும் ரூ.8 கோடிக்கு மேல் உள்ளது.
முன்னதாக, நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததற்கிடையே, திடீரென நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டார். இதையடுத்து, பாஜக சார்பில் அக்கட்சியின் வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் அவரது மனைவி ராதிகா அறிவிக்கப்பட்டார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், தனக்கு ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.6.57 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.