ஏங்க.. அவர் முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும்… விஜய் குறித்து வானதி சீனிவாசன்..!
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அடிக்கடி விஜய் ஆலோசனை நடத்தி வருவது மற்றும் நடிகர் விஜய்யின் சமீபகால நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தி வருகின்றன.
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு அவர் நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த சூழலில், நடிகர் விஜய் அவரது கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பார் என்று தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய் மக்கள் இயக்கத்தின் மூத்த நிர்வாகிகள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக டெல்லிக்கு சென்றிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம், “நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “ஏங்க.. அவர் முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும். அப்புறம் பேசலாம். நம்ம நாட்டுல யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாமே. ஏன் நீங்க கூட ஒரு கட்சி ஆரம்பிக்கலாம். கட்சி ஆரம்பிக்குறது பெருசு இல்ல. மக்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அப்படி விஜய் எப்படி கட்சி நடத்துறாருனு பாப்போம். மக்களுக்கு என்ன செய்றாருனு பாப்போம். அப்புறமா உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்” என அவர் கூறினார்.