அஸ்வினை பாருங்க.. நீங்க ஸ்பின்னர்னு வெளிய சொல்லிக்காதீங்க.. இங்கிலாந்து பவுலர்களை பொளந்த பீட்டர்சன்!

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா அளவிற்கு இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களால் செயல்பட முடியவில்லை என்று முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து வழக்கம் போல் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 246 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகியது.

இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களையும், இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி ஸ்பின்னர்கள் 9வது ஓவரிலேயே அட்டாக்கில் கொண்டு வரப்பட்டாலும், ஒவ்வொரு விக்கெட்டையும் பவுலர்களின் சிறந்த பந்துகளால் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இங்கிலாந்து அணியின் எந்த பேட்ஸ்மேனும் ஸ்பின்னிற்கு ஏமாந்து விக்கெட்டை பறிகொடுக்கவில்லை. இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் இருந்தும் இங்கிலாந்து அணி ஸ்பின்னர்களால் மட்டும் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

சராசரியாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் 4.1 டிகிரி அளவிற்கு ஸ்பின்னாகி வந்த நிலையில், இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு 3.7 டிகிரி அளவிற்கே ஸ்பின்னாகிறது. இதுதான் இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசுகையில், எனது மிகப்பெரிய கவலையே ஸ்பின்னர்கள் தான். ஏனென்றால் நாங்கள் 2012ஆம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதற்கு திறமையான ஸ்பின்னர்கள் இருந்தது மிக்கிய காரணம்.

பனேசர் மற்றும் ஸ்வான் இருவரும் அஸ்வின், ஹர்பஜன் சிங் மற்றும் பிரக்யான் ஓஜாவை விடவும் நன்றாக பவுலிங் செய்தார்கள். அதுபோன்ற ஒரு பவுலிங்கை இங்கிலாந்து அணியின் தற்போதைய ஸ்பின்னர்களிடம் காண முடியவில்லை. ஐதராபாத் மண்ணில் எதிர்பார்த்த அளவிற்கு இங்கிலாந்து பவுலர்கள் பந்தை ஸ்பின் செய்ய தெரியவில்லை. ஆனால் இந்திய அணியினர் மேஜிக் செய்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *