அந்த பையனை பார்த்து வச்சுக்கோங்க.. வெஸ்ட் இண்டீஸ் வீரரை போல் ஆடுகிறான்.. சச்சின் தாஸ் பற்றி அஸ்வின்!

இந்திய யு19 அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தாஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்பை போல் விளையாடுவதாக ஜாம்பவான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
யு19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் கேப்டன் உதய் சஹரனுடன் இணைந்த இளம் வீரர் சச்சின் தாஸ் இந்திய அணியை மீட்டெடுத்தார். அந்த சூழலில் கூட 47 பந்துகளில் அரைசதம் அடித்த சச்சின் தாஸ், இறுதியாக 95 பந்துகளில் ஒரு சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 96 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் சதம் அடிக்கும் வாய்ப்பை சச்சின் தாஸ் தவறவிட்டார்.
அதேபோல் 81 ரன்கள் மட்டுமே சேர்ந்த இந்திய அணி கேப்டன் சஹரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சச்சின் தாஸ் ஆட்டத்தை முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த யு19 உலகக்கோப்பை தொடரில் மட்டும் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் தாஸ் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 294 ரன்களை விளாசியுள்ளார்.
மிடில் ஆர்டர் வெளுத்து கட்டும் சச்சின் தாஸை ஐபிஎல் ஏலத்தில் வாங்க எந்த அணியும் முன் வரவில்லை. இந்த நிலையில் சச்சின் தாஸ் குறித்து நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், சச்சின் தாஸின் ஆட்டமும் ஸ்டைலும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்பை நினைவுப்படுத்துகிறது. உதய் சஹரன் மற்றும் சச்சின் தாஸ் இடையிலான பார்ட்னர்ஷிப்பில் எந்த பதற்றமும் இல்லை என்று பாராட்டியுள்ளார்.
அண்மை காலங்களாக இளம் வீரர்களை தேடி தேடி அடையாளம் கண்டு வரும் அஸ்வினின் கணிப்புகள் பல்வேறு தரப்பினர் மத்தியில் சென்று சேர்கிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன் அஸ்வின் கூறிய இளம் வீரர்கள் பலரும் பல்வேறு அணிகளால் வாங்கப்பட்டனர். சாய் சுதர்சனை முதன்முதலில் அடையாளம் கண்டதும் அஸ்வின் தான். இந்த நிலையில் சச்சின் தாஸ் அஸ்வின் பாராட்டி இருப்பது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.